பச்சைப் பயறு கடையல் என்பது ஒரு கொங்கு நாட்டு உணவாகும். நம் பாரம்பரியமான உணவுகளில் அதிகம் பயறு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் என்று சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் குழந்தைகளுக்கு பயிறு வகைகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் உடல் ஆரோக்கியமும் நல்ல வளர்ச்சியும் பெறுவார்கள். இப்படி உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பச்சைப் பயறு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.
பச்சைப் பயறு அல்லது பாசிப்பயறு உடலுக்கு குளுமை தரக்கூடிய ஒரு உணவாகும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இது உதவுகிறது.

உடலின் எடையை இது சீராக பராமரிக்கும். வயிற்றினை நிறைவுடன் வைத்திருக்கக் கூடிய ஒரு உணவு பொருள். இதனை முளைகட்டி உண்டால் அதிக நன்மைகளை பெறலாம்.
குழந்தைகளுக்கு இந்த பச்சை பயிரினை கடையல் சாதமாக செய்து கொடுக்கும் பொழுது அவர்களுக்கு சுவையான சத்தான ஒரு உணவாய் அமையும்.
பச்சைப் பயறு கடையல் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சைப் பயறு – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 1
வர மிளகாய் – 3
வர மல்லி – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – 7 பல்
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சைப் பயறு கடையில் சாதம் செய்யும் முறை:

பச்சைப் பயறை நன்கு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் என்னை விட்டு அதனுடன் சீரகம், மிளகு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு பொரிய விடவும்.
வர மிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளவும்
சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சிறிதளவு மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் ஏற்கனவே வறுத்து வைத்த பாசிப்பயறுடன் இவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரில் வேகவிடவும்.
ஐந்து அல்லது ஆறு விசில் வந்ததும். குக்கரை நிறுத்தி விசில் அடங்கியதும் சிறிது நேரம் கழித்து குக்கரை திறக்க வேண்டும்.
நன்கு குழைந்து இருக்கும் பச்சைப் பயறை மத்தினை கொண்டு கடையவும்.
இப்பொழுது இந்த கடையலினை சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய் ஊற்றி பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சூடான சுவையான சத்தான பச்சைப் பயறு கடையல் சாதம் தயார்…!
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

