எவ்வளவு வருமானம் வந்தாலும் போதவில்லையா? அப்போ இதை முயற்சி செஞ்சு பாருங்க…!

Published:

முன்பெல்லாம் மாதக்கடைசியில் தான் பிரச்சனை என்றால் இப்பொழுதெல்லாம் மாதம் முழுவதுமே பிரச்சனையாக பலருக்கு இருக்கிறது. எவ்வளவு வருவாய் வந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை தடுப்பது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது.

வருமானம் போதவில்லை என்று புலம்புபவரா நீங்கள்? அப்படி என்றால் முதலில் செலவை குறைத்து பழகுங்கள்.

செலவை எப்படி குறைப்பது? அனைத்திலும் கஞ்சத்தனம் செய்ய முடியுமா? என்று கேட்டால் கஞ்சத்தனத்திற்கும் சிக்கனத்திற்கும் வேறுபாடு உள்ளது கூடுமானவரை சிக்கனமாய் இருந்து சேமித்து பழகினால் உங்கள் பொருளாதாரம் உயரும்.

india 3887568 1280

1. உங்கள் வருமானம் வந்தவுடன் முதலில் உணவு, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக உள்ள தொகையை ஒதுக்கி வைத்து விடுங்கள். இவை ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய தேவை இதற்கான தொகையில் நாம் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

2. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் இதற்கான தொகையினை திட்டமிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொருள்களின் பயன்பாடுகளில் நம்முடைய அலட்சியத்தாலும் கவனக்குறைவினாலும் ஏற்படும் வீண் விரயத்தை தவிர்த்திடுங்கள். உதாரணமாக நீண்ட நேரம் அடுப்பில் ஒரு பொருளை வைத்து விட்டு மறந்து விடுவது, யாரும் இல்லாத அறையில் மின்விசிறியோ தொலைக்காட்சியோ தேவையின்றி இயங்கிக் கொண்டிருப்பது போன்றவற்றை தவிர்த்தால் வீண் விரயம் ஆகும் செலவை கட்டுப்படுத்தலாம்.

debit

3. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு முன்பு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு கொள்ளுங்கள். எந்த பொருள் உங்களுக்குத் தேவைப்படுகிறது? எது உங்களுக்கு வாங்க வேண்டும் என்று விருப்பம்? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். தேவைக்கும் விருப்பத்திற்கும் வேறுபாடு உண்டு.

4. பட்டியலில் உள்ள பொருட்களை மட்டுமே கடைகளில் வாங்குவது என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் கண்களில் படும் பொருட்களை எல்லாம் எடுக்கத் தொடங்கினால் உங்கள் பணம் தான் விரயமாகும்.

5. மாதம் முழுதும் ஆகும் செலவுகளை குறித்துக் கொண்டே வரவும். மிகவும் சிறிய தொகையாக இருந்தாலும் அதை மறக்காமல் எழுதி வைத்துக் கொண்டால் மாத இறுதியில் எவ்வளவு செலவு ஆகிறது? அதில் எவை எல்லாம் வீண் செலவுகள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

6. வாகனப் பயன்பாட்டில் முடிந்தவரை சிக்கனப்படுத்திக் கொள்ளலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், ஒரே அலுவலகத்தில் உள்ளவர்கள் சுழற்சி முறையில் வாகனத்தை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம். மிக அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ சென்று வந்தால் அது செலவை குறைப்பதோடு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும்.

7. உங்களுக்கு ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பமோ அல்லது கனவோ இருந்தால் சம்பளம் வந்தவுடன் உடனடியாக வாங்குவதையோ அல்லது தவணை முறையில் வாங்குவதையோ விட ஒவ்வொரு மாதமும் அந்த பொருளுக்கு தேவையான ஒரு தொகையை தனியாக எடுத்து வைத்துக் கொண்டே வாருங்கள் சிறுக சிறுக சேமித்து வாங்கும் பொழுது உங்களுக்குப் பிடித்தமான பொருள் இன்னும் உங்கள் மனதிற்கு நெருக்கமானதாய் மாறிவிடும்.

8. சிலர் வருமானம் வந்ததும் செலவுகளுக்கான தொகையை தனித்தனியாக பிரித்து தனித்தனி கவர்களில் வைத்து விடுவர். அந்தக் கவரில் உள்ள தொகை தீர்ந்ததும் அதற்காக அந்த மாதம் இனி செலவு செய்ய மாட்டார்கள். இதுவும் ஒரு நல்ல முறை தான். உதாரணமாக பொழுது போக்கிற்கு என்று ஒதுக்கிய கவரில் உள்ள பணம் முடிந்துவிட்டால் அந்த மாதம் இனி பொழுதுபோக்கிற்காக என செலவு செய்ய மாட்டார்கள்.

9. திருமணம் ஆனவர் என்றால் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்து பேசி செலவுகளை திட்டமிடுங்கள். யார் அதிகம் செலவு செய்கிறார்கள் என்று குறை கூறி பட்டிமன்றம் செய்வதை விட கலந்து பேசி செலவுகளை திட்டமிடலாம்.

saving

10. மிக முக்கியமாக உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பிற்கு என்று ஒதுக்கி விடுங்கள். சேமிப்பு என்றும் உங்களுக்கு கை கொடுக்கும்.

மேலும் உங்களுக்காக...