குழந்தைகள் பொதுவாக ஆறு மாதங்களுக்குப் பிறகு எழுந்து உட்கார முயற்சி செய்வார்கள். ஆரம்பத்தில் உட்காரும்பொழுது சமநிலை இல்லாமல் தடுமாறுவார்கள். பிறகு இடுப்பு மற்றும் கால் எலும்புகளின் உதவியோடு தடுமாறாமல் உட்கார பழகிக் கொள்வார்கள்.
சில குழந்தைகள் கால்களை நீட்டியபடி அல்லது மடக்கியபடி என்று ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நிலையில் அமர பழகுவார்கள்.
ஆனால் ஒரு சில குழந்தைகள் w வடிவில் அமர்வார்கள். விளையாடும் பொழுது உணவு உண்ணும் பொழுது தொலைக்காட்சி பார்க்கும் பொழுது என எந்நேரமும் w வடிவில் அமர்ந்த நிலையில் இருப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயது வரை W வடிவில் அமர்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றாலும் ஆறு வயதிற்கு மேலும் இதே நிலை தொடர்ந்தால் அது குழந்தையின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏன் W வடிவில் அமருகிறார்கள்?
குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்த நிலையில் அமர்வது வசதியாக இருப்பது போல் தோன்றும்.
உடலை சம நிலையில் வைத்துக் கொள்ளத் தெரியாத சில குழந்தைகளுக்கு W வடிவில் அமருவது பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வு தரும்.
மன இறுக்கம் உடைய குழந்தைகள் இந்த நிலையில் அமர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எப்பொழுது கவலைப்பட வேண்டும்?
ஆறு வயதிற்கு மேலும் இதே நிலையில் அமர தொடங்கினால் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவர்களுடைய நடையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும்.
எப்பொழுதாவது இந்த நிலையில் அமர்ந்தால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால் எப்பொழுதுமே இதே நிலையில் மட்டுமே தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்.
என்னென்ன பாதிப்பு ஏற்படலாம்:
W வடிவில் குழந்தைகள் தொடர்ந்து அமரும் பொழுது அவர்களுடைய இடுப்பு மற்றும் தொடைகளில் தசைகள் இறுக்கமடையும்.
தசைகள் இறுக்கமடையும் பொழுது அது எலும்பு வளர்ச்சியை பாதிப்படைய செய்கிறது.
குழந்தைகளின் எலும்பானது வளைந்த தோற்றத்தைப் பெற்று அவர்களுடைய நடை புறா நடை போன்ற அமைப்பை பெறும்.
W நிலையில் அதிகப்படியான புவியீர்ப்பு விசையின் விளைவால் அவர்களுடைய உடலை சமநிலையில் பராமரிக்க முடியாத நிலைக்கு உள்ளாவார்கள்.
குழந்தைகள் அமர எது சரியான நிலை
கால்களை நீட்டி அமர்தல்.
கால்களை மடக்கி சம்மனமிட்டு அமர்தல்.
சிறிய நாற்காலியில் அமர்தல் (பெரிய நாற்காலியில் அமரும்பொழுது அதிலும் குழந்தைகள் W நிலையில் அமர வாய்ப்பு இருக்கிறது எனவே கால்களை மேலே தூக்கி வைக்காத படி சிறிய நாற்காலியில் அமர வைத்து பழகலாம்.)
W வடிவில் அமரும் அனைத்து குழந்தைகளும் இந்த பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்று அஞ்ச வேண்டாம். சில குழந்தைகள் பள்ளி சென்ற பின்போ அல்லது மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் பொழுது அவர்களைப் பார்த்து மாற்றிக் கொள்வார்கள்.
சில குழந்தைகள் குறிப்பிட்ட வயது வந்தவுடன் இப்படி அமர்வதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினால் மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் பெற்றோராய் அவர்கள் எந்த பாதிப்பிற்கும் ஆளாகாமல் பராமரிக்க வேண்டியது கடமை எனவே ஆரம்பத்திலேயே அவர்கள் உட்காரும் நிலையை சரி செய்தல் நலம்.