குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்டால் இவற்றை கவனிக்க தவறி விடாதீர்கள்!!!

By Sowmiya

Published:

குழந்தை பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட காலம் வரை அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். குழந்தைக்கு குறிப்பிட்ட வயது வந்து அவர்களுக்கு எது சரி? எது தவறு? இப்படி செய்தால் அதன் விளைவுகள் என்ன? என்று யோசித்து செயலாற்ற தொடங்கும் வரை பெற்றோரின் கண்காணிப்பு மிகவும் முக்கியம். அதுவும் சிறு குழந்தைகளாக இருப்பின் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது.

baby fell1

என்னதான் பெற்றோர்கள் 24 மணி நேரமும் தங்களின் குழந்தைகளை கண்காணித்தாலும் அவர்களையும் மீறி ஏதாவது ஒரு சமயத்தில் குழந்தைகள் விழுவது இயல்பு. குறிப்பாக குழந்தை ஆறு மாதத்திற்குப் பின்பு உட்கார துவங்கும் பொழுதோ, இல்லை நடக்க கற்றுக் கொள்ள துவங்கும் பொழுதோ உடலை சம நிலையில் வைத்துக் கொள்ள தெரியாமல் அடிக்கடி கீழே விழுவது உண்டு. குழந்தைகள் எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்யும் காலத்தில் ஓயாமல் கீழே விழுந்து விடுவார்கள். மேலும் படுக்கையில் உறங்கும் நிலையில் கூட பல குழந்தைகள் புரண்டு படுக்கும் பொழுது கீழே விழுந்து விடுவர். இப்படி குழந்தைகள் கீழே விழும் பொழுது அவர்களுக்கு கை கால்களிலோ அல்லது முன்னந்தலையிலோ அடிபட்டு லேசான வீக்கம் இருந்தால் நாம் உடனடியாக அதற்கு தகுந்த சிகிச்சைகளை செய்து சரி செய்து விடுவோம்.

உங்கள் குழந்தைக்கு கண்களில் மை வரைகிறீர்களா? இதை கொஞ்சம் படியுங்கள்!!!

ஆனால் பின்னந்தலையில் அடிப்படும் பொழுது வெளிக்காயம் ஏதும் இல்லாவிட்டால் அஜாக்கிரதையாக கவனிக்காமல் இருந்து விடக் கூடாது. குழந்தையின் பின்னந்தலையில் அடிபடாத வண்ணம் பாதுகாக்க வேண்டும் மீறி அடிபட்டால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

baby cry

1. குழந்தைகள் கீழே விழுந்த அதிர்ச்சியில் நீண்ட நேரம் அழுவார்கள் அப்படி கடுமையாக அழும் குழந்தையை சமாதானம் செய்த பிறகு அவர்களின் சுவாசத்தை கவனியுங்கள். நாடித்துடிப்பில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

2. காது மூக்கு அல்லது வாயில் ஏதேனும் திரவம் வெளியேறுகிறதா என்பதை பாருங்கள். இதனை எச்சில் என்றோ அல்லது தண்ணீர் என்றோ சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். இது மூளை தண்டுவடத்தை பாதுகாக்க கூடிய திரவமாக இருக்கலாம் ‌‌கவனிக்காமல் விட்டு விட்டால் கண் பார்வை குறைபாடு, கேட்பதில் பிரச்சனை, தலைவலி போன்ற உடல் நலக் கோளாறுகள் ஏதேனும் ஏற்படலாம்.

baby fell

3. வெட்டுக் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை சோதித்து பாருங்கள். வீக்கம் ஏற்பட்டு அது கடுமையாக வளர்ந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை நாடுங்கள்.

4. குழந்தையின் கண் வெளியே வந்தது போன்ற தோற்றம் அளித்தாலும் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். மூளையில் ஏற்படும் அதிர்ச்சியால் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு கண்கள் வெளியே வரலாம் இது ஆபத்தானது. எனவே கவனமாய் கண்காணிக்க வேண்டும்.

baby cry 1

என்ன? மொபைல் பார்க்கும் குழந்தைகள் இத்தனை பாதிப்பிற்கு உள்ளாகிறார்களா?

குழந்தைகள் கீழே விழுந்தால் முதலில் பெற்றோர் நிதானமாக செயல்பட வேண்டும் குழந்தைகளை முதலில் ஆசுவாசப்படுத்தி அதன் பின் அவர்களை கண்காணியுங்கள். 24 மணி நேரம் வரை எந்த அறிகுறிகளும் இல்லை என்றால் அச்சப்பட தேவையில்லை. ஆனால் ஏதேனும் அறிகுறிகள் அல்லது குழந்தையின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ வல்லுநரை நாடுவது தான் நல்லது.