கேரள அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேற்கு வங்காளத்தில் ஒரு காலத்தில் வலிமை வாய்ந்த சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சி இன்று கிட்டத்தட்ட அரசியல் களத்தில் இருந்து காணாமல் போனது போல, கேரளாவிலும் இதேபோன்ற ஒரு தலைவிதி இடது ஜனநாயக முன்னணிக்கு ஏற்படுமா என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்திய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரிய ஆதிக்கம் சிதைந்து வருவதையும், பாரதிய ஜனதா கட்சியின் எழுச்சியையும் தெளிவாக காட்டுகின்றன. இந்த மாற்றம், மாநிலத்தின் அரசியல் கட்டமைப்பை மறுவரையறை செய்ய தொடங்கியுள்ளது.
பா.ஜ.க., கேரளாவில் நீண்டகால இலக்குடன் செயல்பட்டு வருவதாக அதன் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன. முன்பு இருந்ததை போல வெறும் ஓரங்கட்டப்பட்ட சக்தியாக இல்லாமல், தற்போது மாநிலத்தின் முக்கியமான பகுதிகளில் அது நல்ல அஸ்திவாரத்துடன் காலூன்றி வருகிறது. குறிப்பாக, திருச்சூர் மக்களவை தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றியது, அக்கட்சிக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அத்துடன், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க. மேயர் பதவியை பெற்றுள்ளதோடு, பல உள்ளாட்சி அமைப்புகளிலும் அதன் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இது, கட்சியின் வளர்ச்சிக்கான வலுவான அடையாளங்கள் ஆகும்.
இந்த வெற்றி, பாரம்பரியமாக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே மட்டும் சுழன்று கொண்டிருந்த கேரள அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியின் எழுச்சியை உறுதிப்படுத்துகிறது. பா.ஜ.க.வின் அரசியல் இலக்குகள் நீண்டகால திட்டங்களை கொண்டிருப்பதாக தெரிகிறது. கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் தலைமை மட்டத்தில் நடைபெறும் விவாதங்களின்படி, 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் கேரள சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு இணையாக ஒரு பலமான கட்சியாக உருவெடுப்பதே முதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கட்டமாக, 2031ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அல்லது ஒரு முக்கிய பங்குதாரராக மாறுவதே பா.ஜ.க.வின் இறுதி இலக்காக உள்ளது. மேற்கு வங்கத்தில் வலுவிழந்த கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, கேரளாவிலும் இடதுசாரிகள் பின்வாங்கினால், பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அது மேலும் உந்துசக்தியாக அமையும்.
கேரள அரசியலில் தற்போது எழுச்சியுடன் காணப்படும் பா.ஜ.க.வுக்கு, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப். மட்டுமே நேரடி போட்டியாளராக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் குறைவது என்பது, இடதுசாரிக்கு செல்லும் வாக்குகள் பா.ஜ.க.வை நோக்கி செல்லாமல், காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்குமா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் தோல்வி பா.ஜ.க.வின் வெற்றிக்கு வழி வகுக்குமா என்ற விவாதம் நடந்து வருகிறது.
இந்த சூழலில்தான் நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு குறித்த கேள்விகள் எழுகின்றன. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கேரளாவில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள தமிழ் பேசும் வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு கொண்டவர். கேரள அரசியலில் விஜய்யின் பங்கு என்னவாக இருக்கும் என்றால், அது நேரடியான அரசியல் போட்டியாக இல்லாமல், கேரளாவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள தமிழ் வாக்காளர்கள் மற்றும் அவரது சினிமா ரசிகர்களின் வாக்குகள் ஒரு பக்கமாக திரட்டப்பட்டால், அது அங்குள்ள நெருக்கடியான தேர்தல் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்பட்சத்தில், கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் மாற்றி ஓட்டு போட வாய்ப்பு உள்ளது. இதனால் கம்யூனிஸ்ட் கூட்டணியின் வாக்குவங்கி பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்து எதிர்க்கட்சியாகவும் வாய்ப்புள்ளது.
எனவே, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தை போல காணாமல் போகுமா என்பது உடனடியாக தெரியாவிட்டாலும், அதற்கான அரசியல் சூழல் ஆரம்பமாகி வருகிறது. பா.ஜ.க., தனது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான பாதையில் உறுதியாக அடியெடுத்து வைத்துள்ளது. 2026 மற்றும் 2031 சட்டமன்ற தேர்தல்களே கேரள அரசியலின் உண்மையான எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
இந்த களத்தில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அவரது ரசிகர்களின் வாக்குகள், ஒரு சிறு சக்தியாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கம் கேரளாவின் அரசியல் சமன்பாடுகளை மாற்றுவதற்கான திறனைக்கொண்டுள்ளது என்பதே நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
