கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ரஷ்யா தனது முக்கிய கச்சா எண்ணெயான யூரல்ஸ் கச்சா மீது இந்தியாவுக்கு மிகப்பெரிய தள்ளுபடியை திடீரென வழங்கியுள்ளது. இது உலகளாவிய ஆற்றல் சந்தையை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த யூரல்ஸ் கச்சா எண்ணெய் தான் ரஷ்யாவின் முக்கிய விலை நிர்ணய அளவுகோலாக கருதப்படுகிறது. இந்தியாவின் சில சுத்திகரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவுகோலான ப்ரென்ட் கச்சா எண்ணெயின் விலையை விட கிட்டத்தட்ட $7 டாலர் குறைவாகவே பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவுக்குப் பெரிய விலைக்குறைப்பு இப்போதுதான் நிகழ்கிறது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்கு இந்த சலுகை ஏன் இப்போது கிடைக்கிறது? இது வெறும் தாராள மனப்பான்மையா அல்லது அரசியல் விளையாட்டா?
இந்த ஆழமான தள்ளுபடிக்கு முக்கிய காரணம், அண்மையில் ரஷ்யா மீது அமெரிக்கா ஏவிவிட்ட கடுமையான தடைகள் மற்றும் வரி அழுத்தங்களே ஆகும். கடந்த ஒரு மாதமாக, அமெரிக்கா ரஷ்யாவின் போர் பொருளாதாரத்திற்கு செல்லும் பணத்தை குறைக்கும் நோக்குடன் சக்திவாய்ந்த தடைகளை அறிமுகப்படுத்தியது. இதன் தாக்கம் உடனடியாக உணரப்பட்டது: நவம்பர் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதி கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
எண்ணெய்க் கப்பல்கள் வழியில் சிக்கி தவித்தன. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் உட்பட பல இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை குறைத்துக்கொண்டன. சரக்குகள் முடக்கப்படலாம் என்ற அச்சமே இதற்கு காரணம்.
ரஷ்யாவை பொறுத்தவரை, இது ஒரு நெருக்கடி. ஆசியாவில் உள்ள தனது மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் ஒருவர் பின்வாங்கியதால், மாஸ்கோவிடம் எஞ்சியிருந்த ஒரே ஆயுதமான விலையை பயன்படுத்த முடிவு செய்தது. அமெரிக்க தடைகளால் ரஷ்ய எண்ணெயை நகர்த்துவது, காப்பீடு செய்வது மற்றும் பணம் செலுத்துவது கடினமான போதிலும், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடுமையான தள்ளுபடியை ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 90% இறக்குமதி செய்கிறது. மலிவான கச்சா எண்ணெய் என்றால், சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரிக்கும். பெட்ரோல் மற்றும் டீசலுக்கான உள்ளீட்டு செலவுகள் குறையும். எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதியில் இந்தியா மேலும் போட்டித்தன்மையுடன் செயல்பட முடியும்.
ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடைகள் ரோஸ்னிஃப்ட் , லுக்ஆயில் போன்ற முக்கிய ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை குறிவைக்கின்றன. இந்தியா ஒருபுறம் மலிவான ரஷ்ய எண்ணெய்க்கும், மறுபுறம் அமெரிக்காவின் தடைகள் என்ற அச்சுறுத்தும் சுத்திக்கும் இடையே சிக்கியுள்ளது. ரஷ்யக் கச்சா எண்ணெய்க்கு பதிலாக வேறு சப்ளையர்களை தேடினால், இந்தியாவுக்கு ஆண்டுக்குக் கூடுதலாக $3 பில்லியன் முதல் $5 பில்லியன் வரை செலவு ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது உள்ளூர் எரிபொருள் விலைகளை உயர்த்தக்கூடும். இந்தியா தற்போது இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் சமநிலைப்படுத்தும் ஒரு ராஜதந்திர நகர்வை மேற்கொண்டு வருகிறது:
ரஷ்யாவின் இந்தத் தள்ளுபடி குறுகிய கால லாபம் மட்டுமே என்றாலும் குறைந்தது இரண்டு வருடங்கள் இந்த தள்ளுபடி இருக்கும் என்றும், எனவே தற்போதைய தள்ளுபடி லாபத்தை பயன்படுத்திக்கொண்டு, அதே சமயம் தள்ளுபடி நிறுத்தப்ப்டும் நிலை வந்தால் அப்போது அமெரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து கொள்முதலை அதிகரித்து, சப்ளையர்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.
எனவே அமெரிக்கா என்ன தான் தடை போட்டாலும் இன்னும் 2 வருடங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தாது என்று தான் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
