முடி கொட்டுவது என்பது தற்போது பலருக்கு தலையாய பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்களுக்கு முடி கொட்டி உள்ளதாகவும் இது குறித்து ஆய்வு செய்தபோது கோதுமையில் உள்ள செலினியம் அளவு அதிகரித்ததால் தான் முடி அதிக அளவில் கொட்டுதாகவும் அதுமட்டுமின்றி சிலருக்கு கை விரல்களில் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் கோதுமை சாப்பிட அச்சப்பட்டு வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பால்தானா மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் முடி உதிரும் பிரச்சனை உருவாகியுள்ளதாகவும், கடந்த நான்கு முதல் ஐந்து மாதங்களாக மக்கள் அதிகளவு முடிகளை இழக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பால்தானா மாவட்டத்தில் மக்களின் முடி உதிர்வின் பிரச்சனை, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் இருந்து வந்த கோதுமையில் அதிகமான செலினியம் இருப்பது தான் காரணம் என பத்மஸ்ரீ பரிசு பெற்ற மருத்துவர் ஹிம்மத்திராவ் பவாஸ்கர் கூறினார்.
மருத்துவர் பவாஸ்கர் அந்த பகுதி மக்களை முழுமையாக ஆய்வு செய்து, உள்ளூர் ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட கோதுமையையும் ஆய்வு செய்தபோது கோதுமையில் அதிகளவு செலினியம் இருந்தது என்று கண்டறிந்தார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா கோதுமையில் 600 மடங்கு அதிகமான செலினியம் இருப்பதாகவும், இது முடி உதிர்விற்கு காரணமாகவும் கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம், சிறுநீர் மற்றும் முடியில் அதிகமான செலினியம் உள்ளது என்பது பரிசோதனையிலும் தெரிய வந்துள்ளது.
செலினியம் என்பது மண் மற்றும் தண்ணீரில் இயற்கையாக இருக்கும் ஒரு தாது. இது சில உணவுகளிலும் காணப்படும். மனிதர்களுக்கு மிகவும் குறைந்த அளவு செலினியம் மட்டுமே தேவையானது, இது மெட்டபாலிசம் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்த கோதுமையில் மிக அதிகளவு செலினியம் இருப்பதாக முடி உதிர்வு, கைவிரல்கள் அலர்ஜி உள்பட சில பிரச்சனைகள் எழுந்துள்ளது.
இதனையடுத்து குறைந்த அளவு செலினியம் உள்ள கோதுமைகளை இந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.