டெல்லி: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகள் நிதி உதவி பெறலாம். இந்த திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
எப்படி கிடைக்கும்: பயிர் காப்பீடு செய்த பின்னர் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்து, பயிர் காப்பீடு திட்ட செயலில், பாதிப்பு நடந்த 72 மணி நேரத்துக்குள் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும். இதன் பின் அந்த பகுதியில் உள்ள வேளாண் அதிகாரி, ஆய்வு செய்து இழப்பீட்டு பயன்களை தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு முறையில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டப்படி, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, அதிக பரப்பில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் காப்பீட்டு தொகை வழங்குகிறது அரசு. ஒருவேளை நெல் பயிர்களை விதைக்க இயலா சூழ்நிலை காரணிகளுக்கு வி.ஏ.ஓ., விடம் விதைப்பு சான்று பெற்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற முடியும்.
அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் மற்றும் குறு வட்டாரங்களில் அறிவிக்கை செய்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் உட்பட இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள் தான். வங்கியில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ள முடியும்.
கன்னிப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.716 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. கன்னிப்பூ நெற்பயிருக்கான காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.35,800 ஆகும். விவசாயிகள் முன்கூட்டியே காப்பீட்டு தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.