தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

By Keerthana

Published:

டெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த சம்மன்களை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து சம்மனை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘மணல் குவாரிகள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ள டிஜிட்டல் ஆவணங்களில் சில ஆவணங்களை திறக்க முடியவில்லை. குறிப்பாக 7 ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் (எப்.ஐ.ஆர்.) உள்ளன. சட்டவிரோத மணல் குவாரிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பான பட்டியலை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்கிறேன்’ என வாதிட்டார்.

அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ‘அமலாக்கத் துறை கேட்ட ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது’ என்று வாதிட்டார்.இதனையடுத்து நீதிபதிகள், ‘உத்தரவை ஏற்று தமிழ்நாடு அரசு ஆவணங்களை வழங்கியுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல’ என்று அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் முதல் தகவல் அறிக்கைகள், ஆவணங்கள் குறித்த பட்டியலை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கும் வகையில் விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.