மைசூர்.. ரூ.30 லட்சம் காப்பீடு பணத்துக்காக அப்பாவை போட்டுத்தள்ளிய மகன்.. சிக்கியது எப்படி?

மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரூ.30 லட்சம் பணத்துக்காக விவசாயியை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது அண்ணன் இந்த தகவலை கேட்டு அவரது தம்பியும்…

Son arrested for killing father over Rs 30 lakh insurance money in Mysuru, Karnataka

மைசூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் ரூ.30 லட்சம் பணத்துக்காக விவசாயியை அடித்து கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய அவரது மகனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தனது அண்ணன் இந்த தகவலை கேட்டு அவரது தம்பியும் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா கொப்பா கிராமத்தை சேர்ந்த 50 வயது விவசாயி அப்பண்ணா (வயது 50). இவரது தம்பி தர்மா (46). தங்களுக்கு சொந்தமான நிலத்தில் அண்ணன் தம்பிகள் விவசாயம் செய்து வந்தனர். அப்பண்ணாவின் மகன் பாண்டு (26). அப்பண்ணா, தனது பெயரில் ரூ.30 லட்சத்துக்கு காப்பீடு செய்து வைத்திருந்தார். வேலைக்கு எங்கும் செல்லாமல் சுற்றித்திரிந்த பாண்டு, தந்தை காப்பீடு செய்துள்ள ரூ.30 லட்சத்தை அபகரிக்க முடிவு செய்துள்ளார். அந்த பணத்துக்காக பெற்ற தந்தையையே கொல்லவும் துணிந்தார்.

அதன்படி சம்பவத்தன்று பாண்டு தனது தந்தை அப்பண்ணாவை மஞ்ஜேதேவனஹள்ளி கிராமத்தின் அருகே இருக்கும் பிருந்தாவன் பூங்கா அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவரது தலையில் உருட்டுக்கட்டையால் பாண்டு சரமாரியாக தாக்கி கொலை செய்தாா்.

விபத்தில் இறந்தால் தான் காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால், அப்பண்ணாவின் உடலை சாலையில் கொண்டு வந்து போட்டார். பின்னர் அவர் காவல் நிலையத்துக்கு சென்று தனது தந்தை விபத்தில் இறந்ததாக புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அப்பண்ணாவின் உடலை கைப்பற்றினர்.

இதற்கிடையே அப்பண்ணா இறந்து கிடந்த பகுதியில் விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும், ஆதாரமும் இல்லை. மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது பாண்டுவுடன் அப்பண்ணா செல்வது பதிவாகி இருந்தது. அத்துடன், அப்பண்ணாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் விபத்தில் இறக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பாண்டு மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பாண்டு தனது தந்தை அப்பண்ணாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை அப்பண்ணாவை கொன்றுவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடி அவரது பெயரில் காப்பீடு செய்யப்பட்டுள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்காக பாண்டு நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து பயிலுகுப்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அப்பண்ணா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி தர்மா, அந்தப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.