தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் முக்கியமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, முதன் முதலாக குஜராத்தில் உள்ள வதோதராவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியக் கொடியை அலைக்கழித்து வரவேற்றனர்.
வதோதரா விமான நிலையத்திற்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி, அங்கிருந்து விமானப்படை நிலையம் வரை ஒரு கிலோமீட்டர் நீளமான ரோட் ஷோவில் பங்கேற்றார். இந்த பேரணியில் கேப்டன் சோஃபியா குரேஷியின் இரட்டையர் சகோதரி ஷைனா சுன்சாரா மற்றும் சகோதரர் சஞ்சய் குரேஷி பங்கேற்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேரணிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷைனா, “என் சகோதரி சோஃபியா நாட்டுக்காக செய்த செயல், என்னை மட்டுமல்லாது முழு நாட்டையே உணர்வுபூர்வமாகத் தூண்டியுள்ளது. பிரதமரை நேரில் சந்திப்பது ஒரு பெருமை. பெண்கள் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை செய்திருக்கிறார். சோஃபியா என் சகோதரி என்பதைவிட, இப்போது நாடு முழுக்க மக்களுக்கான சகோதரியாக மாறிவிட்டார்,” என்றார்.
சோஃபியா சகோதரர் சஞ்சய் குரேஷி கூறியபோது, “என் சகோதரிக்கு இந்த வாய்ப்பை அளித்த இந்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் ஆகிய இரண்டுக்கும் நன்றி. நம்முடைய வீரப் படைகள், பெண்கள் ஆண்களுக்கு குறையில்லை என்பதை எதிரிக்கு நிரூபித்தன,” எனக் கூறினார். பெண்கள் முன்னேற்றமின்றி நாடு வளர முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு ராணுவ அதிகாரியாக சோஃபியா குரேஷி தனது கடமையை செவ்வனே செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரை பாராட்டாமலும் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் அவரது குடும்பத்தினர் பிரதமரின் மோடியின் ரோட் ஷோவில் கலந்து கொள்வது அரசியல் சாயம் பூசும் ஆபத்து ஏற்படுத்தும். இதை அவரது குடும்பத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என பல நெட்டிசங்கள் இது குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
