இந்தியாவின் இன்னொரு மாநிலம் ஆகிறதா சிந்து? அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சால் பரபரப்பு.. இந்தியா கூப்பிட்டால் உடனே வர தயார்.. ஆர்வமாக இருக்கும் சிந்து மாகாண மக்கள்.. சிந்து வந்துவிட்டால் பலுசிஸ்தானும் இந்தியா வசமாகிவிடுமா? பதற்றத்தில் பாகிஸ்தான்..!

இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் எதிர்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் இணையக்கூடும் என்று வெளிப்படையாக பேசியிருப்பது, தேசிய அளவில் ஒரு மிகப் பெரிய விவாத பொருளாக…

sindh

இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் எதிர்காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் இணையக்கூடும் என்று வெளிப்படையாக பேசியிருப்பது, தேசிய அளவில் ஒரு மிகப் பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. அவரது இந்த பேச்சு, சிந்து மாகாண மக்களிடமும், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சிந்தி மக்கள் ஒருங்கிணைத்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், சிந்து மாகாணம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

“இன்று சிந்து நிலப்பரப்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரிக ரீதியாக சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. நிலங்களை பொறுத்தவரை, எல்லைகள் நாளை மாறக்கூடும். யாருக்கு தெரியும், நாளை சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம். சிந்து நதியை புனிதமாக கருதும் நமது மக்கள், அவர்கள் எங்கிருந்தாலும், எப்போதும் நம்முடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் நம்மிடையே இருப்பார்கள்.”

இந்த கூற்று, சிந்து மாகாணம் கலாச்சார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஒரு பகுதி என்ற செய்தியை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

ராஜ்நாத் சிங்கின் இந்தக் கருத்து, ஒரு சாதாரண எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் தனிப்பட்ட கருத்தாக இல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட கேபினட் கமிட்டி ஆன் செக்யூரிட்டியில் அங்கம் வகிக்கும் ஒருவரின் கருத்தாக இருப்பதால், இது வெறும் பேச்சு அல்ல; ஆழமான அரசியல் நகர்வின் ஒரு பகுதி என கருதப்படுகிறது.

இத்தனை நாளாக பாகிஸ்தான் ஆட்சியாளர்கள், இந்தியாவுக்கு குறி வைத்திருந்த பகுதி பலூசிஸ்தான் தான் என்று நம்பினர். இந்தியாவுக்கு பலூசிஸ்தானுடன் நேரடி நில தொடர்பு இல்லாதது பாகிஸ்தானுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருந்தது.

ஆனால், சிந்து மாகாணத்திற்கும் பலூசிஸ்தானுக்கும் நேரடி நிலத் தொடர்பு உள்ளது. இப்போது சிந்து குறித்து இந்தியா உரிமை கோருவது, “இந்த பெரிய திட்டத்தில் பலூசிஸ்தானும் உள்ளது” என்ற மறைமுக செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சிந்து மாகாணம் விவசாயம் சார்ந்த பூமி. அங்குள்ள விவசாயிகள், பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் தவறான திட்டங்கள் மற்றும் நீர் ஒதுக்கீட்டால் கடும் அதிருப்தியில் கொந்தளிப்பில் உள்ளனர். ராஜ்நாத் சிங்கின் பேச்சு, இந்த சரியான நேரத்தில் அம்மக்களின் சிந்தனையை தூண்டும் நோக்கில் அமைந்துள்ளது.

சிந்திக்களின் முதல் திரைப்படம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது; இந்தியாவின் முதல் விமான சேவை வழித்தடம் மும்பை டு சிந்து மாகாணமாக இருந்தது; பழைய இந்திய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியவரும் சிந்தி இனத்தை சேர்ந்தவரே. இந்த வரலாற்று மற்றும் நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் இந்தியா சிந்து மாகாணத்தின் மீது உரிமை கோர தார்மீக காரணம் உள்ளது.

ராஜ்நாத் சிங்கின் கருத்து கற்பனை மற்றும் ஆபத்தானது என்றும், இது சர்வதேச சட்டத்தையும், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளின் இறையாண்மையையும் மீறுவதாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச சட்டம் குறித்து பேசும் பாகிஸ்தான், முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்ய வேண்டும்; பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

சிந்து மாகாண விவாதத்தில் பதறிய பாகிஸ்தான், வழக்கம் போல் தனது கண்டன அறிக்கையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் கொண்டு வந்தது. இது, இந்தியாவுக்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது.

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இந்தப் பேச்சு, சிந்து மாகாண மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்திற்கான சிந்தனையை விதைக்க வைக்கவும், பாகிஸ்தானுக்கு ஒரு வலுவான புவிசார் அரசியல் சவால் விடவும் திட்டமிட்ட ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது. சிந்து மக்கள் எடுக்கும் முடிவு, எதிர்காலத்தில் இரு நாடுகளின் எல்லைகளை மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.