இந்த நேரத்தில், AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி கொண்டுள்ளனர். காரணம் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
ஏப்ரல் 22 அன்று பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பதற்றம் அதிகரிக்க தொடங்கிய வேளையில், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்னும் பதில் சொல்லாத நேரத்தில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தவர் ஓவைசி. இதுதான் அவரை உடனடியாக சமூக வலைதளங்களில் ஹீரோவாக்கியது.
பல நேரங்களில் அவருடைய அரசியல் நோக்கங்களை ஆதரிக்காத பலரும் பாகிஸ்தான் குறித்து அவர் கூறிய கருத்துக்களை ஆதரித்தனர்.
அதேபோல் காங்கிரஸ் எம்பி சசி தரூர். ஒரு சவுதி அரேபிய செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, ‘இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் காரணம் என்ன? இந்தியாவின் குற்றச்சாட்டு மீது என்ன ஆதாரம் இருக்கிறது? என்று கேட்டபோது, தரூர் மிக திறமையாக பதிலளித்தார்.
“ஆதாரங்களைப் பற்றிப் பேசும்போது, பாகிஸ்தான் என்றால் மறுப்பு என்று நினைக்கலாம். 2008-ல் மும்பை தாக்குதலில் 170 பேர் உயிரிழந்தார்கள். அதற்கும் பாகிஸ்தான் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் ஒருவர் உயிருடன் பிடிபட்டபிறகு அவர்களே உண்மை சொல்ல வேண்டிய நிலைக்கு வந்தனர்.
அதேபோல, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று சொல்லி வந்தனர். ஆனால் பாகிஸ்தான் இராணுவ முகாமுக்கு அருகே அவரது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே அவர்களது நடைமுறை.”
“இந்தியா நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் போதுமான பக்க ஆதாரங்கள், ரகசிய தகவல்கள், ஒட்டுக்கேட்ட உரையாடல்கள் என பல உள்ளன. இவைகள் எதையும் பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது. ஆனால், இந்தியா வேண்டுமென்றே இது போன்ற முடிவுகள் எடுக்காது.”
தரூரின் இந்த பதில் சமூக வலைதளங்களில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. “இந்தியாவின் சர்வதேச பேச்சாளராக இவரை நியமிக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய தரூரின் விளக்கம் பலருக்கும் நெஞ்சை தொட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர் என்பது திருமணமான பெண்கள் தங்கள் தலையில் இடும் திலகம். பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலில், தங்கள் ஹனிமூனில் இருந்த புதிதாகத் திருமணமான பெண், இப்போது விதவையாகிய ஹிமான்ஷி நர்வால், தன் கணவனின் உடலருகே துயரத்துடன் குனிந்து இருந்த புகைப்படம் இந்தியாவின் நெஞ்சில் எரிந்துபோன படம். அந்த தாக்குதல், அந்தப் பெண்ணின் சிந்தூரை அழித்தது. அதனால்தான் அந்த ஆபரேஷனுக்கு அந்த பெயர் வெகுவாக பொருத்தமாக இருந்தது.”
சசிதரூர், இந்த ஆபரேஷனின் பெயரை “அருமை” என்று புகழ்ந்ததோடு, “இந்த பெயரை யார் வைத்தார்களோ, அவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர், வெளிநாட்டு ஊடகங்களுடன் பேட்டி கொடுத்து, இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி வருவது சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டை பெற்று வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
