ரூ. 30,000 கோடியை வாட்டர் பாட்டில் தொழிலில் இறக்கிய முகேஷ் அம்பானி.. இனி ரூ.5க்கு குடிநீர் கிடைக்கும்.. பிஸ்லெரி, கின்லி, அக்வாஃபினாவுக்கு நேரடி போட்டி.. ஜியோ சிம் மாதிரி ஆதிக்கம் செலுத்துமா ‘கேம்பா ஷ்யூர்’ வாட்டர் பாட்டில்?

இந்தியாவின் ரூ. 30,000 கோடி மதிப்பிலான மினரல் வாட்டர் பாட்டில் என்ற குடிநீர் சந்தையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய தயாரிப்பு மூலம் கடுமையான விலை போரை தொடங்கியுள்ளது. ‘கேம்பா ஷ்யூர்’ (Campa…

water

இந்தியாவின் ரூ. 30,000 கோடி மதிப்பிலான மினரல் வாட்டர் பாட்டில் என்ற குடிநீர் சந்தையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய தயாரிப்பு மூலம் கடுமையான விலை போரை தொடங்கியுள்ளது. ‘கேம்பா ஷ்யூர்’ (Campa Sure) என்ற புதிய குடிநீர் பிராண்டை முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்திய நிலையில் . இது, சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘பிஸ்லெரி’ போன்ற நிறுவனங்களுக்கு நேரடி சவால் விடுத்துள்ளது.

ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ‘கேம்பா ஷ்யூர்’ குடிநீரின் விலை நிர்ணயம் தான் இந்த விலை போரின் முதல் தீப்பொறி ஆகும். 250 மில்லி லிட்டர் பாட்டில் வெறும் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பிஸ்லெரியின் அதே அளவு பாட்டிலை விட 0.50 காசுகள் குறைவாகும்.

1 லிட்டர் பாட்டில் விலை: போட்டி நிறுவனங்களான பிஸ்லெரி, கின்லி, அக்வாஃபினா ஆகியவற்றின் ஒரு லிட்டர் பாட்டில்கள் ரூ.20 முதல் ரூ.22 வரை விற்கப்படும் நிலையில், ‘கேம்பா ஷ்யூர்’ இன் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.15 முதல் ரூ.17 வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறைந்த விலை ஒட்டுமொத்த தண்ணீர் பாட்டில் விற்பனை போட்டியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஏற்கனவே ‘இண்டிபென்டன்ஸ்’ என்ற பிராண்டின் கீழ் அரிசி, மாவு, பருப்பு மற்றும் சமையல் எண்ணெயுடன் சேர்த்து அடைக்கப்பட்ட குடிநீரையும் விற்பனை செய்து வருகிறது. இப்போது ‘கேம்பா ஷ்யூர்’ என இரண்டாவது குடிநீர் பிராண்டை அறிமுகப்படுத்தியதற்கு பின்னணியில் ஒரு வலுவான காரணம் உள்ளது.

இண்டிபென்டன்ஸ் குடிநீர் என்பது வீடுகளுக்கான மளிகை சாமான்கள் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் இந்த பிராண்ட் குளிர்பானங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. இது ‘கோக்’ மற்றும் ‘பெப்ஸி’க்கு சவால் விடுவதற்காக 2023 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் ‘கேம்பா ஷ்யூர்’ மூலம், ரிலையன்ஸ் தனது விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு கோலா, லெமன் சோடா, எனர்ஜி பானங்கள் மற்றும் இப்போது குடிநீர் என ஒரு முழுமையான குளிர்பானக் கூடையை வழங்க முடியும். இது விற்பனையை எளிதாக்குகிறது. கின்லி மற்றும் அக்வாஃபினாவை கோக் மற்றும் பெப்ஸி பயன்படுத்துவது போல, ரிலையன்ஸும் அதே உத்தியை பின்பற்றுகிறது.

போட்டியாளர்களை விட மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான திறனை ரிலையன்ஸ் அதன் பிரம்மாண்டமான உற்பத்தி அளவு , வலிமையான விநியோக சங்கிலி மற்றும் உள்ளூர் பாட்டில்களை பயன்படுத்துவது போன்றவற்றால் பெறுகிறது.

இந்த குறைந்த விலையில் மற்ற பிராண்டுகள் செயல்பட்டால் நஷ்டத்தை சந்திக்கும் (Bleed), ஆனால் ரிலையன்ஸால் இந்த சவாலை சமாளித்து, போட்டியாளர்களையும் விலையை குறைக்க நிர்பந்திக்க முடியும்.

ரிலையன்ஸின் இலக்கு வெறும் குடிநீரை விற்பது மட்டுமல்ல; இது இரண்டு முனைகளில் போரை தொடங்குகிறது. ஒன்று, சந்தைத் தலைவரான பிஸ்லெரி மற்றும் பார்லே போன்ற பிராண்டுகளுக்கு எதிராகவும், மற்றொன்று, ஒட்டுமொத்த குளிர்பான பிரிவில் கோக் மற்றும் பெப்ஸிக்கு எதிராகவும் ஒரு முழுமையான போட்டித் தளத்தை உருவாக்குகிறது.

ரூ.1 ரூபாய் வித்தியாசம் கூட முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இந்த விலைச் சவால் சிறப்பாக வேலை செய்யும். ஆனால், பெருநகரங்களில், பிராந்திய பிராண்டுகள், பிரீமியம் குடிநீர் பிராண்டுகள் மற்றும் ஏற்கனவே நிலைபெற்ற பிராண்டுகள் மீதான வாடிக்கையாளர் விசுவாசம் ஆகியவை விலை போரை சிக்கலாக்கும்.

இப்போது, ரிலையன்ஸின் இந்த விலை சவாலுக்குப் போட்டியாளர்கள் எவ்வாறு பதிலளிக்க போகிறார்கள் என்பதே கேள்வி: அவர்கள் விலைகளைக் குறைப்பார்களா? தள்ளுபடிகளை அதிகரிப்பார்களா? அல்லது அதே அளவில் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிப்பார்களா?

இந்த விலைப் போர் தொடர்ந்தால், ஒட்டுமொத்த குடிநீர் மற்றும் குளிர்பான துறையின் இலாப வரம்புகள் குறைந்து, சந்தை விலை கட்டமைப்பையே முழுவதுமாக மாற்றியமைக்க நேரிடும். ரூ.5 பாட்டில் சிறியதாக இருந்தாலும், அது சந்தையின் விதிகளை மாற்றும் ஒரு காரணியாக மாறலாம்.