டெல்லி : PMEGP திட்டத்தில் தொழில் தொடங்க ரூ. 50 லட்சம் வரை கடனுதவி பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். மத்திய அரசின் இந்த கடன் உதவியை பெற முயற்சி செய்யும் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் பார்ப்போம்.
சொந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற பலரது கனவு நினைவாகாமல் போனதற்கு பணம் இல்லாதது தான் முக்கிய காரணம்.. அடுத்ததாக சரியானதிட்டமிடல் இல்லாமல் இருப்பதும் காரணம். உண்மையில் சரியான திட்டமிடல் இருந்தால் நல்ல முறையில் மானியத்துடன் கடன் பெற்று சொந்த தொழிலை ஆரம்பிக்க முடியும். அது கடினமானது அல்ல.. அதற்கு வேண்டியது முறையான திட்டமிடல் மட்டுமே. முறையான திட்டமிடல், தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுபவர்களால் கண்டிப்பாக கடன் வாங்கி தொழிலை வெற்றிகரமாக நடத்தவும் முடியும். அப்படிப்பட்ட நபர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரியின் PMEGP திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் தான் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை (Prime Minister’s Employment Generation Programme – PMEGP) செயல்படுத்தி வருகிறது. நீங்கள் உற்பத்தி நிறுவனம் தொடங்க ரூ.50 லட்சம் வரையிலான கடன் பெறலாம்.
சேவை துறையை பொறுத்தவரை ரூ.20 லட்சம் வரை கடன்கள் பெறலாம். மொத்த திட்ட செலவில் 15% முதல் 35% வரை மானியம் கிடைக்கும். ஆனால் உங்களின் மொத்த திட்ட செலவு உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 50 லட்சத்திற்கும் மேலும், சேவை பிரிவுகளுக்கு ரூ. 20 லட்சத்திற்கும் மேலும் தாண்டிவிட்டால், வங்கிகளிலிருந்து மீதி கடன்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
எட்டாம் வகுப்பு முடித்த அனைவரும் PMEGP திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இறைச்சி கடை, போதைப் பொருட்கள் சார்ந்த தொழில்கள், செடிகள், ஆடு, மீன், கோழி, மாடு வளர்ப்பு போன்ற தொழில்களை தொடங்குவதற்கு PMEGP திட்டத்தில் கடன் பெற முடியாது.
தேவையான ஆவணங்கள்: ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரூரல் ஏரியா சர்டிபிகேட், உங்கள் திட்டத்தின் மதிப்பீட்டு அறிக்கை, சிபில் ஸ்கோர் ரிப்போர்ட் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. உங்கள் விண்ணப்ப நிராகரிக்கப்படக்கூடாது என்றால், ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட எல்லா ஆவணங்களிலும் உங்கள் பெயர் மற்றும் முகவரி ஒரே மாதிரி மிஸ்டேக் இல்லாமல் இருக்க வேண்டும். அடுத்ததாக நீங்கள் திட்ட அறிக்கை எனப்படும் நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை ஜிஎஸ்டி பதிவு செய்த நிறுவனத்திடம் விலை புள்ளி (கொட்டேசன்) வாங்க வேண்டும். ஜிஎஸ்டி பதிவு செய்யாத நிறுவனத்திடம் கொட்டேசன் வாங்கினால் உங்கள் விண்ணப்பம் நிராகிரிக்கப்படும். எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.
அடுத்தாக முக்கியமான விஷயம் சிபில் ஸ்கோர், சிபில் ஸ்கோர் சரியாகஇல்லை என்றால் எல்லாம் சரியாக இருந்தாலும் உங்களுக்கு கடன் கிடைக்காது. உங்கள் சிபில் ஸ்கோர் 650க்கு மேல் இருக்க வேண்டும். 720க்கு மேல் இருந்தால் மிக எளிதாக கடன் கிடைக்கும். சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும் என்றால், உங்கள் கடன் தவணைகளை சரியான முறையில் செலுத்தி அடைத்திருக்க வேண்டும். உங்கள் கடன் இஎம்ஐக்களை உரிய காலத்தில் செலுத்தி இருக்க வேண்டும். ஏற்கனவே வாங்கி எல்லா கடனையும் கட்டியிருக்க வேண்டும். அப்படி இருந்தால் சிபில் நன்றாக இருக்கும். கடன் கிடைப்பதிலும் எந்த சிக்கலும் இருக்காது.
எல்லாம் சரியாக உள்ளது என்றால் PMEGP திட்டத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் தான் வசிக்கும் மாவட்டத்தில் இருக்கும், காதி மற்றும் கதர் கிராம அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது https://www.kviconline.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.