ரஷ்யாவிடமிருந்து இந்தியா மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது, அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் சிலர், “இந்தியாவில் சில பிராமணர்கள் இந்த லாபத்தால் பயனடைகிறார்கள்” என்று சாதி ரீதியான கருத்துக்களை தெரிவித்ததாக செய்தி வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அமெரிக்கா மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா போன்றவர்களும், இந்த வர்த்தகத்தால் குஜராத்தில் உள்ள சில நிறுவனங்கள் மட்டுமே லாபம் பெறுவதாகவும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஆ.ராசா குஜராத் vs தமிழ்நாடு என்ற அரசியலை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ரஷ்ய எண்ணெயை மலிவாக வாங்கி, அதனை சுத்திகரித்து அதிக லாபத்தில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிடமிருந்து, மத்திய அரசு “விண்ட்ஃபால் வரி” என்ற பெயரில் லாபத்தை பிடித்தம் செய்துள்ளது. இந்த வரி வருமானம், அரசின் ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டு, மாநிலங்களின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், பெரு நிறுவனங்கள் மட்டும் லாபம் அடைவதை அரசு தடுக்கிறது.
இந்த நேரத்தில் விண்ட்ஃபால் (Windfall Tax) வரி என்றால் என்ன என்பதை பார்ப்போம். விண்ட்ஃபால் வரி என்பது எதிர்பாராத வகையில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மீது அரசு விதிக்கும் ஒரு சிறப்பு வரியாகும். பொதுவாக, உலக அளவில் சந்தையில் ஏற்படும் சில திடீர் மாற்றங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, சில நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. இந்த லாபம், அந்த நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட உழைப்பு அல்லது முதலீடுகளால் கிடைத்ததல்ல. மாறாக, புறக்காரணிகளால் விளைந்தவை. உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை திடீரென உயரும்போது, சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெரும் லாபம் அடையும். இந்த எதிர்பாராத லாபத்தில் ஒரு பகுதியை அரசு எடுத்து கொள்வதுதான் விண்ட்ஃபால் வரியின் நோக்கம். இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய், மக்களின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது
அதேபோல் அமெரிக்கா விதித்த 50% வரி காரணமாக, ஏற்றுமதி சந்தையில் பாதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்குகிறது. திருப்பூர், சூரத், லூதியானா போன்ற தொழில் நகரங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை.
குஜராத்தில் உள்ள நிறுவனங்கள் லாபம் அடைகின்றன, அதனால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்ற கருத்து, திராவிட கட்சிகளின் நீண்ட நாள் பிரிவினைவாத பேச்சின் ஒரு பகுதி என விமர்சனம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக, “வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற கருத்தை இந்த கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், அதே கட்சிகள் இப்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சியடைந்ததாகவும், செல்வ செழிப்பான மாநிலமாகவும் இருப்பதாகவும் பெருமையாக கூறுகின்றன.
தூத்துக்குடியில் இந்தியாவின் மிக நவீன பல்வகை சரக்கு மையம் அமைப்பது, மதுரையில் நான்கு வழி சாலைகள் அமைப்பது போன்ற பல பெரிய திட்டங்களுக்கு மத்திய அரசுதான் நிதியளிக்கிறது. இந்த திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே செய்யப்படுகின்றன.
எண்ணெய் வர்த்தகத்தால் குறிப்பிட்ட ஒரு மாநிலம் மட்டும் லாபம் அடைகிறது, அதனால் மற்ற மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன” என்று கூறுவது ஒரு தவறான அரசியல் நாடகம். மத்திய அரசு, விண்ட்ஃபால் வரி போன்ற கொள்கைகள் மூலம் லாபத்தை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது. அதே சமயம், இதுபோன்ற பிரிவினை பேச்சுக்கள், வளர்ச்சி திட்டங்களை மறைத்து, அரசியல் லாபத்துக்காக மக்களின் ஒற்றுமையை குலைப்பதாகவே உள்ளது’ என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
