மும்பை மாகாணப் பகுதிகளில் கடல் வழித்தடங்களை உருவாக்கி, வாட்டர் டாக்சி சேவையை தொடங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம், மும்பையில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டதாக, துறைமுகத்துறை அமைச்சர் நிதேஷ் ராணே பி.டி.ஐ-க்கு தெரிவித்தார். “மும்பை மெட்ரோ வெற்றி பெற்றதை அடுத்து மும்பையின் முக்கிய பகுதியில் வாட்டர் டாக்ஸிகளை தொடங்க உள்ளோம். ஏற்கனவே எட்டு முதல் ஒன்பது வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளோம்,” என்று தெரிவித்தார். மேலும் நம்மிடம் அதற்கான வசதிகள் அனைத்தும் உள்ளது என்றும், மேலும் சர்வதேச ஆலோசகர்களுடன் ஆலோசனையில் இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.
இந்தியா கேட்வே முதல் அலிபாக் மற்றும் எலிபந்தா தீவுக்கு இடையே 30 இருக்கைகள் கொண்ட மின் கப்பல்கள் அறிமுகமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவ்வகை 15 கப்பல்கள் ஸ்வீடனின் Candela Cruise என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டுள்ளதாகவும், இதில் முதல் இரண்டு கப்பல்கள் ஆகஸ்ட் மாதத்தில் வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கப்பல்கள் மாசுபாட்டை குறைத்து, பொதுமக்களுக்கு மலிவு விலையில் போக்குவரத்து சேவையை வழங்கும். இந்த சேவையை Maharashtra Maritime Board நிர்வகிக்கும் எனவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள மரக்கப்பல்கள் தொடர்ந்தும் இயக்கலாம். பயணிகள், நில வழிப்போக்குவரத்து சேவைகளில் இருப்பது போலவே, தங்களுக்குப் பிடித்தவைகளை தேர்ந்தெடுக்க முடியும் என அமைச்சர் கூறினார்.
மேலும், Roll-on Roll-off சேவையும் மும்பையின் மஸ்கான் பகுதியிலிருந்து சிந்து தூர்க் மாவட்டத்தின் மால்வன் வரை வழங்கப்படும். இந்த சேவையில் 4 மணி நேரம் 30 நிமிடங்களில் பயணத்தை முடிக்கலாம்.
இந்த சேவையின் முதல் கட்டம் இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது தொடங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.