ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர், சிறைச்சாலையில் நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பே விடுதலையடைந்தார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே நகரில் இன்னொரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள கல்யாண் என்ற பகுதியில், 60 வயதான பெண் ஒருவர் வாசலில் நின்றுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அக்பர் ஷேக் என்ற நபர் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். அந்த பெண் தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே சென்றபோது, பின்னால் சென்ற ஷேக் வீட்டின் கதவை அடைத்தார் மற்றும் டிவியின் ஒலியை அதிகரித்தார்.
அதன்பின், அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தார். மேலும், ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி, தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கொலை மற்றும் திருட்டில் ஷேக் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அவரை கைது செய்தனர். விசாரணையில், தங்க நகைகளுக்காகவே கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், ஷேக் ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் நன்னடத்தை காட்டியதற்காக, அவர் 8 மாதங்களுக்கு முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், விடுதலையான அடுத்த நாளே மறுபடியும் ஒரே மாதிரியான குற்றத்தை செய்திருப்பது, போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.