புல்வாமா முதல் சமீபத்திய டெல்லி செங்கோட்டை தாக்குதல்கள் வரை, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அவசர கூட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குழுவின் ஆய்வு என தீவிரமாக செயல்படுகிறது. இத்தகைய சமயங்களில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு போன்ற பெயர்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். உண்மையில், இந்தியாவில் போர் அறிவிப்பது, இராணுவ நடவடிக்கைகளை தொடங்குவது மற்றும் RAW, NSG போன்ற உளவுப்படைகள், ஆயுதப்படைகள் ஆகியவற்றுக்கு யார் அதிகாரம் செலுத்துகிறார்கள்? இந்தியாவின் விரிவான பாதுகாப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போது காண்போம்.
1. உச்சபட்ச முடிவெடுக்கும் குழு: பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS)
இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு அல்லது போர் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரே குழு இதுதான்: பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (Cabinet Committee on Security – CCS).
உறுப்பினர்கள்: இது ஒரே இரவில் முடிவெடுக்கும் அமைப்பு அல்ல, இதற்கென ஒரு முழுமையான கட்டமைப்பு உள்ளது. இந்த குழுவின் இறுதி முடிவுக்கு பின்னால், பின்வரும் ஆறு தலைவர்கள் உள்ளனர்:
பிரதமர் (தலைவர்)
பாதுகாப்புத் துறை அமைச்சர்
உள்துறை அமைச்சர்
நிதி அமைச்சர்
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அதிகாரம்: தேசிய பாதுகாப்பு தந்திரங்கள், போர் அறிவிப்பது, முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள், அணுசக்தி கோட்பாடு மற்றும் ரகசிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்த குழுவே முடிவெடுக்கிறது. இந்த குழுவின் முடிவே இறுதியானது.
2. மூளையாகச் செயல்படும் குழுக்கள்: தேசிய பாதுகாப்புக் கவுன்சில் (NSC)
இறுதி முடிவை CCS எடுத்தாலும், அதற்கான கள பணிகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் மாபெரும் அமைப்பு பின்னணியில் செயல்படுகிறது. அதுதான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் (National Security Council – NSC). இது 1998 இல் நிறுவப்பட்டது. NSC வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே CCS தனது முடிவுகளை எடுக்கிறது.
இதில் உள்ள உறுப்பினர்கள்:
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (அஜித் தோவல்),
முப்படைத் தளபதிகள் (CDS)
பிரதமர், பாதுகாப்பு,
உள்துறை
நிதி
வெளியுறவு அமைச்சர்கள்
நிதி ஆயோக்கின் துணைத் தலைவர்
இந்த இரண்டு போக் இன்னொரு குழு உள்ளது. அதுதான் Strategic Policy Group – SPG. NSC-யின் முக்கிய மூளையாக செயல்படுவது இந்தக் குழுதான். இந்த குழுவின் தலைவர்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA).
உறுப்பினர்கள்: இராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், சி.டி.எஸ்., RAW, IB தலைவர்கள், ISRO தலைவர், DRDO தலைவர், RBI கவர்னர் மற்றும் முக்கியச் செயலாளர்கள் இதில் உள்ளனர்.
பணி: குறுகிய மற்றும் நீண்ட கால அச்சுறுத்தல்களை ஆராய்ந்து, இந்தியாவின் பதில் நடவடிக்கைகளைத் தீர்மானித்து, சிசிஎஸ்-க்கு நேரடியாக அறிக்கைகளை அனுப்புகிறது.
மேலும் 2 குழுக்கள் உள்ளன. அவை தேசிய பாதுகாப்புக் ஆலோசனைக் குழு (NSAB) மற்றும் கூட்டுப் புலனாய்வுக் குழு.
தேசிய பாதுகாப்புக் ஆலோசனைக் குழுவில் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகள், முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள், தூதர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்ட இந்தக் குழு, அனுபவத்தின் அடிப்படையில் NSC-க்கு ஆலோசனைகளை வழங்குகிறது.
கூட்டுப் புலனாய்வுக் குழு உளவுத் தரவுகளின் மையமாக (Data Hub) செயல்படுகிறது. முப்படைகள், RAW, IB, DIA போன்ற அனைத்து உளவு நிறுவனங்களிடம் இருந்தும் தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் சிசிஎஸ்-க்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது.
மேலும் தேசிய பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பதவிகளில் ஒன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) பதவி. 2014 முதல் அஜித் தோவல் இந்த பதவியில் உள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள், ல் மற்றும் தேசிய பாதுகாப்பு திட்டமிடல் குறித்து பிரதமருக்கு ஆலோசனை வழங்குவது இவரது முக்கியப் பணி. உளவுத்துறை ஒருங்கிணைப்பாளர்: RAW, IB உட்பட அனைத்து முக்கிய உளவுத்துறை அமைப்புகளிடமிருந்தும் நேரடியாக இவர் அறிக்கைகளை பெறுகிறார். தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனா, பாகிஸ்தான் மற்றும் நட்பு நாடான இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான பாதுகாப்பு விவகாரங்களை இவர் தனிப்பட்ட முறையில் நிர்வகிக்கிறார்.
பாதுகாப்புத் திட்டமிடல் குழு (DPC) என்பது 2017 இல் மோடி அரசால் உருவாக்கப்பட்ட இந்த குழுவின் தலைவரும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரே. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையை வரைவது, இராணுவத்தின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்துவது ஆகியவற்றில் இந்தக் குழு கவனம் செலுத்துகிறது.
சுருக்கமாக, உச்சபட்ச அதிகாரத்தை கொண்ட சிசிஎஸ் தலைமையில், என்எஸ்ஏவின் ஆலோசனைகள் மற்றும் என்எஸ்சி-யின் விரிவான கட்டமைப்புடன் இணைந்து இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு அமைதியாக நாட்டைக் காக்கிறது. பாகிஸ்தானை போலல்லாமல், இந்தியாவில் இராணுவ முடிவுகள் இந்த கட்டமைப்பின் வழியாக மட்டுமே எடுக்கப்படுகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
