இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மத்திய அரசு உருவாக்கி வரும் ‘தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை’ இந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டமானது வெறும் மேம்போக்கான மாற்றமாக இல்லாமல், பயங்கரவாதத்தை அதன் வேரிலிருந்தே கிள்ளியெறியும் ஒரு பிரம்மாண்டமான வியூகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து முன்னெடுக்கப்படும் மறைமுக போர்களுக்கும், இந்தியாவிற்குள் ஊடுருவி இருக்கும் பயங்கரவாத ஆதரவு வலைப்பின்னல்களுக்கும் இது ஒரு முற்றுப்புள்ளியாக அமையும்.
இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கம், பயங்கரவாதத்தை ஒரு ‘சட்ட ஒழுங்கு’ பிரச்சனையாக பார்க்காமல், ஒரு ‘தேசிய பாதுகாப்பு’ சார்ந்த விஷயமாக அணுகுவதாகும். பொதுவாக இந்தியாவில் சட்ட ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும்போது மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் சில இடைவெளிகள் ஏற்படுகின்றன. இந்த இடைவெளியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பிப்பதை குறைக்க, அமெரிக்காவின் ‘கூட்டு பயங்கரவாத பணிக்குழு’ போல், மாநில மற்றும் மத்திய அமைப்புகள் இணைந்து செயல்படும் ஒரு ஒருங்கிணைந்த கொள்கையை அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
புதிய சட்டத்தின் கீழ் ‘தீவிரவாதமயமாக்கல்’ என்பது ஒரு கடுமையான குற்றமாக வரையறுக்கப்பட உள்ளது. இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் மூளைச்சலவை செய்து வன்முறைக்கு தூண்டும் டிஜிட்டல் தீவிரவாதம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ரகசியமாக நிதி பெற்று நடத்தப்படும் மதமாற்றங்கள் போன்றவை இனி தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்படும். நாட்டின் சமூக ஒருமைப்பாட்டை சிதைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகவே பார்க்கப்படும் என்பதால், இதற்கு பின்னால் இருக்கும் வெளிநாட்டு சக்திகள் மற்றும் நிதி ஆதாரங்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விமான நிலையங்களை போலவே துறைமுகங்களுக்கும் ஒரு பிரத்யேக பாதுகாப்புப் பணியகம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் சுமார் 80 முக்கிய துறைமுகங்களில், குறிப்பாக தனியார் துறைமுகங்களில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கடல் வழியாக போதைப்பொருள் மற்றும் கள்ள நோட்டுகளை கடத்தி வந்து பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டும் கும்பல்களை ஒடுக்க இது உதவும். போதைப்பொருள் கடத்தல் என்பது வெறும் குற்றச்செயல் மட்டுமல்ல, அது நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலைய செய்யும் ‘ஹைப்ரிட் போர்’ என்பதால், இதனை தடுக்க தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட உத்திகள் கையாளப்படும்.
பயங்கரவாத தாக்குதல் போன்ற அவசர காலங்களில் எந்த ஒரு தாமதமும் இன்றி விசாரணை அமைப்புகள் செயல்பட, ‘ஒருங்கிணைந்த செயல்பாட்டு நடைமுறை’ வகுக்கப்பட உள்ளது. இதன் மூலம், ஒரு அசம்பாவிதம் நடந்தால் மாநில போலீஸ், என்.எஸ்.ஜி மற்றும் என்.ஐ.ஏ ஆகிய அமைப்புகளில் யார் முதலில் களம் இறங்க வேண்டும், யார் ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்பதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கும். இது புலனாய்வு பணிகளை விரைவுபடுத்துவதுடன், மாநிலங்களின் அரசியல் அழுத்தங்களால் பயங்கரவாத வழக்குகள் திசைதிருப்பப்படுவதையும் தடுக்கும்.
இறுதியாக, இந்த சட்ட மாற்றங்கள் அனைத்தும் இந்தியாவின் நீண்ட கால பொருளாதார இலக்குகளை கருத்தில் கொண்டே செய்யப்படுகின்றன. 2035-க்குள் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்க வேண்டுமானால், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மிகவும் வலுவாகவும், முதலீடுகளுக்கு உகந்த அமைதியான சூழலும் நிலவ வேண்டும். தேர்தல் அரசியலைத் தாண்டி, அடுத்த 30 ஆண்டுகால இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் இந்த ‘ஆபரேஷன் பாதுகாப்பு’, இந்தியாவின் இறையாண்மையை சவாலுக்கு உட்படுத்தும் அனைத்து சக்திகளுக்கும் ஒரு தெளிவான எச்சரிக்கையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
