உலகின் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தை விட இந்திய பெண்கள் வைத்திருக்கும் தங்கம் அதிகம்: ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

  உலக அளவில் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தை விட, இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது, இந்திய குடும்பங்களில்…

Gold

 

உலக அளவில் டாப் 10 நாடுகள் வைத்திருக்கும் மொத்த தங்கத்தை விட, இந்தியாவில் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு அதிகம் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. அதாவது, இந்திய குடும்பங்களில் உள்ள பெண்களிடம் மட்டும் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜப்பான், துருக்கி மற்றும் இந்தியாவின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் தங்க இருப்புகளை விட அதிகமாக, இந்திய பெண்களின் பீரோக்களில் தங்கம் இருக்கிறது என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

பொதுவாக, இந்தியர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். தொடக்கத்திலிருந்தே, பெண்கள் தங்கம் வாங்குவதை ஒரு விருப்பமான அணிகலனாகவே கருதுகின்றனர். எந்த ஒரு பண்டிகை மற்றும் கொண்டாட்டம் வந்தாலும், முதல் முதலாக வாங்கப்படும் பொருள் தங்கமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நகர மக்களை விட கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்கி, அவசர தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். அவர்களது சிறந்த முதலீடு தங்கமே என்றும், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை அடுத்த கட்ட முதலீடுகளாகவே கருதப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

உலக அளவில் சேமிப்பு முறைகள் மாறினாலும், இந்திய பெண்கள் தங்க சேமிப்பை இன்னும் குறைத்திருக்கவில்லை. சீனாவுக்கு பிறகு, உலக அளவில் தங்கத்தை அதிகமாக வாங்குவோர் இந்தியர்களே என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்திய குடும்பங்கள் தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறார்கள். பணப் பாதுகாப்பு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக தங்கம் இருப்பதால், சிறு தொகை கிடைத்தால்கூட அதற்கேற்ப தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.

மற்ற நாடுகளில் கிரெடிட் கார்டின் மூலம் கடன் வாங்கி ஆடம்பரமாக செலவழித்துக் கொண்டிருக்கும்போது, இந்தியர்கள் மட்டும் சிந்தித்து செயல்பட்டு, தங்கத்தை வாங்கி சேமிக்கிறார்கள். இது ஒரு அழகுப் பொருளாகவும், அவசர காலத்திற்கான பாதுகாப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கினாலும், இந்தியர்களுக்கு பெரிதாக பிரச்சனை இல்லை; அவர்கள் வைத்திருக்கும் தங்கமே அவர்களை பாதுகாக்கும் என்றும் அந்த ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது.