80வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு இந்தியா மிக கடுமையான பதிலடியை கொடுத்துள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை வெளிப்படையாக போற்றி புகழ்வதாகவும், அதன் உண்மையான பயங்கரவாத முகத்திரையை மூடிமறைக்க நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஷெபாஸ் ஷெரீப் தனது உரையில், கடந்த மே மாத மோதலில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்தது என்று கூறினார். இந்த அபத்தமான கூற்றை பெடல் கஹ்லோட் கடுமையாக மறுத்தார்.
“பாகிஸ்தானின் பிரதமர், இந்தியாவுடனான அண்மைய மோதல் குறித்து விசித்திரமான ஒரு கதையை முன்வைத்தார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். மே 9 ஆம் தேதி வரை, பாகிஸ்தான் இந்தியா மீது மேலும் தாக்குதல்களை நடத்தப்போவதாக மிரட்டியது. ஆனால், மே 10 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் எங்களிடம் சண்டையை நிறுத்தும்படி நேரடியாக கெஞ்சியது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “இடைப்பட்ட நிகழ்வு என்னவென்றால், இந்தியப் படைகள் பல பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தன. அந்த சேதங்களின் படங்கள் பகிரங்கமாக கிடைக்கின்றன. அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்துபோன விமான தளங்கள் ஒரு வெற்றி போல தோன்றினால், பிரதமர் ஷெரீப் அதை அனுபவிக்கலாம்” என்றும் அவர் கிண்டலாக பதிலளித்தார்.
“இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர், தனது வெளியுறவு கொள்கையின் முக்கிய பகுதியாக இருக்கும் பயங்கரவாதத்தை மீண்டும் ஒருமுறை போற்றி புகழ்ந்து, அபத்தமான நாடகங்களை அரங்கேற்றினார். எந்தவித நாடகத்தாலும் அல்லது பொய்களாலும் உண்மைகளை மறைக்க முடியாது. ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான சுற்றுலாப்பயணிகளின் படுகொலைக்கு காரணமான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (TRF) என்ற பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏப்ரல் 25, 2025 அன்று இதே பாகிஸ்தான்தான் பாதுகாத்தது” என்று கஹ்லோட் கூறினார்.
பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் கடந்தகால நடவடிக்கைகளையும் பெடல் கஹ்லோட் நினைவூட்டினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக கூறிக்கொண்டே, ஒசாமா பின்லேடனுக்கு பல ஆண்டு காலமாக பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது என்றும், பாகிஸ்தான் அமைச்சர்களே பல ஆண்டுகளாக பயங்கரவாத முகாம்களை நடத்தி வருவதாக சமீபத்தில் ஒப்புக்கொண்டதையும் அவர் குறிப்பிட்டார்.
“பயங்கரவாதத்தை வளர்ப்பதில் நீண்டகால பாரம்பரியம் கொண்ட ஒரு நாடு, அதை நியாயப்படுத்த மிகவும் அபத்தமான கதைகளை முன்வைக்க வெட்கப்படுவதில்லை” என்று அவர் கூறினார்.
“ஆபரேஷன் சிந்தூர்” போது, பஹவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இந்திய படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் சிவிலியன் மற்றும் ராணுவ அதிகாரிகள் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தியதையும் அவர் சான்றாக கூறினார்.
உண்மை என்னவென்றால், கடந்த காலத்தை போலவே, இந்தியாவிலுள்ள அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பு. எங்கள் மக்களை பாதுகாக்கும் உரிமையை நாங்கள் நிலைநிறுத்தியுள்ளோம், மேலும் குற்றவாளிகளையும் அவர்களின் பின்னணியில் உள்ளவர்களையும் நீதியின் முன் நிறுத்தியுள்ளோம்” என்று அவர் கூறினார். பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
பாகிஸ்தானின் அமைதி பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோளை போலியானது என்றும், அதன் உள்நாட்டு அரசியல் வெறுப்பு, மதவெறி மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் பெடல் கஹ்லோட் நிராகரித்தார்.
இறுதியாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். “இந்த விஷயத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கு எந்த இடமும் இல்லை. இது நமது நீண்டகால தேசிய நிலைப்பாடு” என்று அவர் தனது உரையை முடித்தார்.
இந்தியா, ஐ.நா.வில் அளித்த இந்த வலுவான பதிலுரை, பாகிஸ்தானின் தொடர்ச்சியான பொய் பிரச்சாரங்களையும், பயங்கரவாத ஆதரவையும் உலக அரங்கில் அம்பலப்படுத்தியது. பயங்கரவாதமும், நாடகங்களும் உலக மேடையில் விவாதத்தை தீர்மானிக்காது என்ற இந்தியாவின் உறுதியான செய்தியை இது உணர்த்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
