உலக பொருளாதாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அமெரிக்க டாலரின் ஆதிக்கம், தற்போது மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் மேலாதிக்கம் குறைந்து வருவது (De-dollarization), சர்வதேச நிதி உலகில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. அமெரிக்கா தனது கரன்சியை ஒரு ‘ஆயுதமாக’ பயன்படுத்தி பிற நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்து, தனது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதே இதற்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க டாலர் உலகளாவிய வர்த்தகத்தில், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், அமெரிக்காவின் நிதி கொள்கைகள் மற்றும் அரசியல் முடிவுகள் உலகப்பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அமெரிக்காவுக்கு இணங்காத நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்போது, டாலரை அடிப்படையாக கொண்ட சர்வதேச பணப் பரிமாற்ற முறைமையான ஸ்விஃப்ட் அமைப்பிலிருந்து அந்த நாடுகள் நீக்கப்படுகின்றன. இது அத்தியாவசிய பொருட்கள், மருத்துவம், மற்றும் எரிபொருள் வர்த்தகத்தில் கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
இந்த ஆதிக்கம் பல ஆண்டுகளாக சிறிய மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை அழித்துள்ளதால், ஒரு மாற்றுக்கான தேவை தற்போது வலுப்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இந்தப் போக்கு, உலக நாடுகளை டாலரை விட்டு விலகி செல்லத் தூண்டுகிறது.
அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற நோக்குடன், பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா) புதிய வர்த்தக முறையை தொடங்கியுள்ளன.
பிரிக்ஸ் நாடுகள் இப்போது தங்கள் வர்த்தக பரிவர்த்தனைகளை தங்கள் தேசிய கரன்சிகளிலேயே மேற்கொள்கின்றன. உதாரணமாக, ரஷ்யாவுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில், இந்திய ரூபாயும் ரஷ்ய ரூபிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தில் டாலர் தேவையும், அதனால் ஏற்படும் கமிஷன் மற்றும் அரசியல் தலையீடும் தவிர்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக ஒரு பொதுவான பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கலாம் என்று ஆலோசித்து வந்தாலும், இந்தியா இதற்கு சம்மதிக்கவில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் ஒரு வலுவான காரணம் உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா இருப்பதால், பொதுவான கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டால், அதில் சீன யுவான் கரன்சியின் ஆதிக்கம் மேலோங்க வாய்ப்புள்ளது. டாலரின் ஆதிக்கத்தை நீக்குவது என்ற பெயரில், மீண்டும் ஒரு புதிய கரன்சியின் ஆதிக்கத்தின் கீழ் செல்வதை தவிர்க்கவே இந்தியா விரும்புகிறது.
எனவேதான், “பொதுவான பிரிக்ஸ் கரன்சி எதற்கு? அந்தந்த நாடுகள், தங்களின் உள்ளூர் கரன்சிகளில் நேரடியாக வர்த்தகம் செய்துகொள்ளலாம்” என்ற தெளிவான கேள்வியை இந்தியா முன்வைக்கிறது. இந்த நேரடி வர்த்தகம், அரசியல் அழுத்தங்கள் மற்றும் கமிஷன் சிக்கல்களை தவிர்க்க சிறந்த வழியாகும்.
அமெரிக்காவின் பொருளாதார நிலைமை, அதன் ஆதிக்கத்துக்கு மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. அமெரிக்கா தற்போது $38 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 3,374 லட்சம் கோடி என்ற அபாயகரமான தொகையை தாண்டிய உலகின் மிகப் பெரிய கடன் சுமை கொண்ட நாடாக உள்ளது. டாலரின் மதிப்பு குறைந்து, அதன் உலகளாவிய ஆதிக்கம் சரிய தொடங்கினால், டாலரை சேமித்து வைத்துள்ள உலக நாடுகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். டாலர் என்ற நாணயம் மதிப்பிழந்தால், அமெரிக்கா வாங்கி குவித்துள்ள கடனை எந்த நாணயத்தில், யார் பொறுப்பேற்று திருப்பி செலுத்துவார்கள் என்ற கேள்வி சர்வதேச நிதியாளர்கள் முன் உள்ளது.
அமெரிக்காவின் இந்த நிதி நிலைமை, உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி, நாடுகளை டாலரை தவிர்த்து மாற்று வழிகளை நோக்கித் தள்ளுகிறது.
உலக அரங்கில் அமைதியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டுமானால், வல்லரசு நாடுகள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும். அமெரிக்கா தனது அரசியல் ஆதிக்க மனப்பான்மையை விட்டுவிட்டு, மற்ற பெரிய நாடுகளை சம பலத்துடன் அணுகி பேச வேண்டும். தனிப்பட்ட நாட்டின் நலனுக்காக உலகப் பொருளாதாரத்தை ஆயுதமாக்குவது, நீண்ட காலத்திற்கு நீடிக்காது.”
டாலரின் ஆதிக்கம் குறையும் இந்த காலகட்டம், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தேசிய கரன்சிகளுக்கும், ரூபாய்க்கும் உலகளாவிய வர்த்தகத்தில் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கும் ஒரு புதிய சமநிலையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
