பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சைய ஆசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக அணுசக்தி தாக்குதல் மிரட்டலை விடுத்ததையடுத்து, இந்தியா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த ஒரு கூட்டத்தில், “நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைவதாக உணர்ந்தால், உலகத்தின் பாதி பகுதியை எங்களுடன் இழுத்து செல்வோம்” என்று முனீர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத் துறை, “அணு ஆயுத மிரட்டல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான செயல். இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்களின் உள்ளார்ந்த தன்மையை பற்றி சர்வதேச சமூகம் அதன் முடிவுகளை எடுக்க வேண்டும். பயங்கரவாத குழுக்களுடன் ராணுவம் கைகோர்த்து செயல்படும் ஒரு நாட்டில், அணுசக்தி கட்டளை மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை இது மேலும் வலுப்படுத்துகிறது.
ஒரு நட்பு நாட்டின் மண்ணில் (அமெரிக்காவை குறிப்பிட்டு) இத்தகைய தூண்டுதல் கருத்துக்கள் வெளியிடப்பட்டதற்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்தது. “இந்தியா அணு ஆயுத மிரட்டல்களுக்கு அடிபணியாது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. நமது தேசிய பாதுகாப்பை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம்” என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதியளித்தது. இந்தியாவின் இந்த கடுமையான நிலைப்பாடு, பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
