உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் தாஜ்மஹாலில் சமீபத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் நேரில் வந்த போது நடந்த சம்பவமும் அதற்கு பின்னால் உள்ள சில காரணங்களும் தற்போது அதிக பரபரப்பை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்து வரும் தாஜ்மஹாலை நம் நாட்டில் உள்ள மக்கள் மட்டும் இல்லாமல் உலக அளவில் பலர் நேரில் வந்து கண்டுபிடித்து வருகின்றனர்.
ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜிற்காக கட்டிய இந்த காதல் நினைவு சின்னம் பலராலும் வியந்து பார்க்கப்படும் நிலையில் என்றாவது ஒருநாள் அதை நேரில் சென்று பார்த்து விட வேண்டும் என்பதும் பலரின் விருப்பமாக உள்ளது. அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நுராத் என்பவர் தனது தந்தையுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்ப்பதற்காக வந்துள்ளதாக தெரிகிறது.
வெளிநாட்டு பயணியின் விரக்தி..
அதே நேரத்தில் தாஜ்மஹாலை மிக மகிழ்ச்சியாக கண்டுகளித்த நுராத்திற்கு ஒரு சில விஷயங்கள் அங்கே அதிருப்தியை கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நுராத் குறிப்பிட்ட கருத்துக்களின் படி இதுவரை உலகின் 70 நாடுகளை சுற்றி உள்ளதாகவும் அதே போல தாஜ்மஹாலுக்கு தற்போது வருகை தந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே வேளையில் இந்திய அரசிற்கு ஒரு முக்கியமான கோரிக்கையையும் வெளிநாட்டு சுற்றுலா பயணியாக நுராத் வைத்துள்ளார். தாஜ்மஹாலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் அவர்கள் பல மைல்கள் கடந்து வரும்போது அப்படி வருபவர்களுக்காக தனிவரிசை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் ஆனால் பல மணி நேரமாக லைனிலேயே நின்றதாக விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார். வயதான தனது தந்தையும் நீண்ட நேரம் நின்றதன் காரணமாக உடல்நிலை கொஞ்சம் சோர்வடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ள நுராத், வெளிநாட்டு பயணிகளுக்கு என்று தனியாக ஒரு கியூவை தாஜ்மஹாலில் வைக்கும் படியும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தாஜ்மஹாலில் நடந்தது என்ன..
தாஜ்மஹால் வந்த வெளிநாட்டு பயணியின் இந்த கருத்து இணையவாசிகள் மத்தியில் அதிக விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. பலரும் அவர் கூறியிருந்ததை ஏற்றுக் கொண்ட நிலையில், இது தொடர்பாக தாஜ்மஹாலின் பாதுகாப்பு உதவியாளரான பிரின்ஸ் வாஜ்பாய் என்பவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு பயணிகளுக்கென்று தனியாக ஒரு க்யூ உள்ளது என்றும் ஆனால் பாதுகாப்பு என வரும்போது அனைவருக்கும் ஒரே வரிசை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு விஷயத்தில் தாஜ்மஹாலுக்குள் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்றும் அதற்காகத்தான் ஒரே வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தாஜ்மஹாலை பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலா பயனின் கருத்து அவரது தனிப்பட்ட கண்ணோட்டத்தைத் தான் பிரதிபலிக்கிறது என்றும் தாஜ்மஹால் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.