இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், ‘வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்’ (Employment Linked Incentive Scheme – ELI) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக முதன்முதலாக பணிக்கு சேர்வோருக்கும், வேலை வழங்குவோருக்கும் ஊக்கத்தொகை அளிக்கும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பகுதி A: முதன்முதலாக பணிக்குச் சேர்வோருக்கு
முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு, ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
இதன் மூலம், புதியவர்களுக்கு வேலை தேடும்போது ஏற்படும் நிதிச் சிரமங்கள் குறையும்.
பகுதி B: வேலை வழங்குவோருக்கான ஆதரவு
அனைத்து துறைகளிலும், குறிப்பாக உற்பத்தி துறையில், கூடுதல் வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு புதிய வேலைக்கும், ஒரு நிறுவனத்திற்கு மாதத்திற்கு ரூ.3,000 வரை ஊக்கத்தொகை, இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
உற்பத்தித் துறையில் வேலைகளை உருவாக்குவதற்கான ஊக்கத்தொகை, மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும்.
திட்டத்தின் இலக்கு
இந்த ‘வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டம், வரலாற்று சிறப்புமிக்க ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இதன் மூலம்,
வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,
ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்துவது,
சமூக பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற முக்கிய நோக்கங்களை அரசு அடைய திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவில் 3.5 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
