யூடியூபர்கள் மற்றும் பிளாக்கர்கள், சர்வசாதாரணமாக ரயில் நிலையங்களில் வீடியோ எடுத்து தங்கள் YouTube சேனலிலும், இணையதளத்திலும் பதிவு செய்து வரும் நிலையில், இனிமேல் YouTube சேனல் வைத்திருப்பவர்கள் மற்றும் பிளாக்கர்கள் ரயில் நிலையங்களில் வீடியோ எடுக்க கூடாது என ரயில்வே துறை எச்சரித்துள்ளது. மீறி வீடியோ எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையம் என்பது பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக இருப்பதால், “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலுக்கு பிறகு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
அந்த வகையில், கிழக்கு ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எந்த ஒரு ரயில் நிலையத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என்று, யூடியூபர்கள் உட்பட அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த YouTuber ஜோதி மல்கேத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல்களை வழங்கிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ரயில் நிலையம், விமான நிலையங்கள், சில கோவில்கள் உட்பட பல இடங்களை வீடியோ எடுத்து பதிவு செய்ததால், பல ரகசியங்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் தற்போது ரயில் நிலையங்களில் புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கும் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் சில குறிப்பிட்ட ரயில்வே நிகழ்வின் போது மட்டும் புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சமூக வலைதள பதிவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது பொருந்தாது என்றும், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, முன்பு போல இனிமேல் “ரயில் நிலையத்துக்கு சென்றேன், ரயில் ஏறினேன், இந்த ஊருக்கு போனேன், அந்த ஊருக்கு போனேன்” என்று வீடியோவை பதிவு செய்ய முடியாது. அவ்வாறு பதிவு செய்தால், YouTube சேனல் கைவிட்டு போகவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.