மெட்ரோ ரயில்கள் பொதுவாக பயணிகளை மெட்ரோ ரயில் நிலையம் வரைதான் கொண்டு போய் சேர்க்கும். ஆனால், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், பயணிகளை அவரவர் வீடு அல்லது அலுவலகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் புதிய முயற்சியை எடுத்துள்ள நிலையில், இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லி மெட்ரோ ரயில்வே கழகம் “சாரதி மொமண்டம் 2.0” என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம், மெட்ரோ ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை மட்டுமின்றி, ரயில் நிலையத்தில் இறங்கியதும் உங்கள் வீடு வரை செல்வதற்காக பைக், டாக்ஸி, ஆட்டோ போன்ற வசதியையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Autope Payment Solutions Ltd. என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த புதிய வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, பயணி தாங்கள் எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த ரயில் நிலையத்திற்கான மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுத்துவிட்டு, அதன் பிறகு தனது வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல பைக், டாக்ஸி அல்லது ஆட்டோவை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயணி தன்னுடைய இலக்கை அடைந்தவுடன், மெட்ரோ ரயில் நிலையம் வாசலில் அந்த பயணிக்கு வாகனம் தயாராக இருக்கும். ஆனால், அதே நேரத்தில் அவருடைய இலக்கு மிகவும் அருகில் இருந்தால், வாகனங்கள் பரிந்துரை செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ சேவைகளுக்காக ‘Rapido’ உடனும், பெண்களுக்கான பைக் டாக்ஸி சேவையை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான SheRyds உடனும் டெல்லி மெட்ரோ ரயில்வே கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் இலக்கை அடையும் போது, அவர்களுக்கான வாகனம் தயார் நிலையில் இருக்கும் என்றும், அந்த வாகனம் அவர்களை வீட்டிற்கு கொண்டு சென்று சேர்த்துவிடும் என்றும் குறிப்பிடத்தக்கது.
Autope Payment Solutions Ltd. நிறுவனத்தின் CEO அனுராக் பஜ்பாய் இதுகுறித்து கூறியபோது டெல்லி மெட்ரோவுடன் செய்து கொண்டுள்ள எங்களது ஒப்பந்தம் நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு பெரிய முன்னேற்றமாகும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுப் போக்குவரத்தை பயணிக்கு நெருக்கமானதாக மாற்றுகிறோம்,” எனக் கூறினார்.