டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: தீபாவளிக்கே வெடிக்க சதி.. ஜனவரி 26 சதிக்கு முன்னோட்டம்? கைதானவர் வாக்குமூலம்!

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். ஃபரிதாபாத்தில் இருந்து செயல்பட்ட பயங்கரவாத…

blast 1

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு வழக்கில், முக்கிய குற்றவாளியின் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

ஃபரிதாபாத்தில் இருந்து செயல்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட டாக்டர் முஸம்மில் கணாய், விசாரணையின்போது, தானும் டாக்டர் உமர் நபி என்பவரும் பெரிய பயங்கரவாத சதியின் ஒரு பகுதியாக ஜனவரி முதல் வாரத்திலேயே செங்கோட்டை பகுதியை நோட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

குடியரசு தினத் தாக்குதல்: விசாரணை குழுவினர், டாக்டர் முஸம்மிலின் மொபைல் ஃபோன் டேட்டாவில் இருந்து இந்த தகவலை மீட்டெடுத்தனர். அவர்களின் ஆரம்ப திட்டத்தின்படி, ஜனவரி 26 குடியரசு தினம் அன்று செங்கோட்டையைத் தாக்குவதற்கு இலக்கு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தீபாவளி இலக்கு: இந்த அமைப்பு, தீபாவளியின்போது மக்கள் கூடும் ஒரு பொது இடத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் தீபாவளி தாக்குதல் மிஸ் ஆகிவிட்டதாக வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஃபரிதாபாத்தில் பயங்கரவாத அமைப்பு பிடிபட்டதை தொடர்ந்து, அவசரமாக செய்யப்பட்ட வெடிகுண்டு சாதனத்தை கொண்டு செல்லும்போது, அது விபத்தாக வெடித்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையின் முடிவுகள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு முழுமையாக தயாரிக்கப்படாததால், அதன் தாக்கம் குறைவாக இருந்தது. வெடிப்பினால் பெரிய பள்ளம் எதுவும் ஏற்படவில்லை; உலோக துண்டுகளும் கண்டறியப்படவில்லை,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்த புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பவரே இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்றும், அவருக்கும் ஃபரிதாபாத்தில் பிடிபட்ட பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

திங்கட்கிழமை மாலை செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன், காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கிய ஜெய்ச்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புகள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத திட்டம் முறியடிக்கப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டு, 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

டாக்டர் உமர், டாக்டர் முஸம்மில் மற்றும் டாக்டர் ஆதில் அகமது தார் ஆகியோர் ஜெய்ச்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து இரண்டு ரவைகள்மற்றும் இரண்டு வெவ்வேறு வகை வெடிபொருள் மாதிரிகள் உட்பட 40க்கும் மேற்பட்ட தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பரிசோதனையில் ஒரு வெடிபொருள் மாதிரி அம்மோனியம் நைட்ரேட் ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஃபரிதாபாத்தில் டாக்டர் முஸம்மில் கணாய் மற்றும் டாக்டர் ஷஹீன் சயீத் கைது செய்யப்பட்டபோது, 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது.

இரண்டாவது வெடிபொருள் அம்மோனியம் நைட்ரேட்டை விட சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. அதன் சரியான கலவை விரிவான தடயவியல் ஆய்வுக்கு பின்னரே உறுதிப்படுத்தப்படும்.