இன்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆய்வுப்பணிக்காக காரில் சென்று கொண்டிருந்த போது நடுரோட்டில் மாடுகளைக் கண்டதும், முதல்வர் தன்னுடைய வாகனத்தை உடனடியாக நிறுத்தச் சொன்னார். பின்னர், காரிலிருந்து இறங்கி, சாலையோரம் ஒரு மாடுக்கு சப்பாத்தி ஊட்டிக்கொண்டிருந்த நபரிடம் நேரில் சென்று பேசினார். அந்த மாடு சாலையின் நடுவே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதல்வர் ரேகா குப்தா, அந்த நபரிடம் அமைதியாகவும் மரியாதையாகவும், சாலைகளில் மாடுகளுக்கு உணவு ஊட்டுவது தவறானது, இது விபத்துகளுக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாகும் என விளக்கினார். இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, முதல்வர் ரேகா குப்தா தனது பேஸ்புக் பக்கத்தில், “சாலையில் மாடுகளுக்கு சப்பாத்தி வைப்பது தவறு. சுத்தமான டெல்லியை உருவாக்க நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மாடுகளுக்கு கௌசாலாவில் உணவு அளித்து சேவை செய்யுங்கள்,” என கூறினார்.
இது முதல்வர் ரேகா குப்தா மேற்கொண்ட முதல் நடவடிக்கை அல்ல. மார்ச் 26ஆம் தேதி, ஷாலிமார் பாக் அருகே ஹைதர்பூர் பில்வேரில் கடந்தபோது சாலையில் மாடுகள் பார்த்ததும், தனது வாகனத்தை நிறுத்தி, அவற்றை பாதுகாப்பாக கௌசாலாக்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
டெல்லியில் போக்குவரத்து நெரிசல்கள் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதனுடன் சாலைகளில் மாடுகள் நடமாடுவதால் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. மக்கள் மாடுகளுக்கு சாலைகளில் உணவு வைக்கும் போது, அவை அங்கேயே தங்கி விடுகின்றன. இது வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு தேவைப்படும் என்பதால், முதல்வர் தற்போது புதிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் மக்கள் சாலைகளில் மாடுகளுக்கு உணவு வைப்பதை நிறுத்தி, அவற்றை உரிய பாதுகாப்பான இடங்களில் பராமரிக்க செய்ய வேண்டும் எனக் கேட்டு கொண்டார்
மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே டெல்லி சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் மாறும், என முதல்வர் கூறியுள்ளார்.