சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு அதிக வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த நிலையில், சீனாவின் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் மீது கவனம் செலுத்தி உள்ளன. தங்கள் உற்பத்தி யூனிட்டுகளை இந்தியாவுக்கு மாற்றினால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் குறைந்த வரியில் விற்பனை செய்யலாம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனை அடுத்து, சீனாவின் இரண்டு முக்கிய மொபைல் நிறுவனங்கள் இந்தியாவுக்கு தங்கள் நிறுவனங்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எந்தவிதமான வர்த்தக போரும் இல்லை என்பதோடு, பரஸ்பரம் நட்புடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினாலும், அதனை குறைப்பதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பிரச்சனையின்றி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதே நேரத்தில் சீனா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகள் தற்போது அமெரிக்காவுடன் சமாதானம் ஏற்படுத்திக்கொள்ள முடியாது என தெரிகிறது. இந்த சூழ்நிலையில், சீனாவில் உள்ள முன்னணி மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், கூடுதல் சுமையாக மாறும். அதனால், இந்தியாவுக்கு நிறுவனங்களை மாற்றுவதே சிறந்த தேர்வாக கருதப்படுகின்றது.
இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் கூடுதல் சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால், இந்தியாவுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், சீனாவின் முன்னணி இரண்டு மொபைல் நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் நிறுவல் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.