தினசரி கூலிக்கு பீகாரிலிருந்து சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு கட்டுமான தொழிலாளியின் மகளான ஜியா, சமீபத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் முதலிடம் பிடித்ததற்காக தலைப்புகளில் இடம் பெற்றார். பின்னர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாரதீய பாஷா கோடை முகாமில் ஜியாவின் சாதனையை மேற்கோளாக கூறினார். 100-இல் 93 மதிப்பெண்கள் பெற்று தமிழ் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.
16 வயதான ஜியா குமாரி, தனது வீட்டின் வாசலில் கோலம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தரைமேல் நின்றபடி பெருமிதத்துடன் காட்சியளிக்கிறார். அந்தக் கோலம் போடும் திறமை, அவர்கள் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அவர் கற்றுக்கொண்டது.
இந்தி திணிப்புக்கு எதிராக ஜியா மற்றும் அவரது சகோதரிகள் உறுதியாக நின்றனர். “இங்குள்ள மக்களை, இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமல்ல. தமிழ்நாட்டிலிருந்து யாராவது வடஇந்தியாவிற்குச் சென்றால், அங்குள்ளவர்கள் தமிழில் பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை,” என்று சுப்ரியா கூறினார்.
ஜியாவின் தந்தையான தனஞ்ஜெய் திவாரியும், தாயான ரீனா தேவியும், போஜ்புரி மொழி பேசுபவர்கள். அவர்கள் பீஹாரின் சிவான் மாவட்டத்திலிருந்து சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தனர்.
ஜியா தற்போது சென்னையின் பல்லாவரத்தில் தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். ஜியா, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500-இல் 467 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் பள்ளியில் தமிழைக் கற்றுக்கொண்ட முதல் குடும்ப உறுப்பினரல்ல ஜியா. அவரது சகோதரி ரியா குமாரியும் பத்தாம் வகுப்பில் இரண்டாம் மொழியாக தமிழைப் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
“நானும் தமிழை படித்து, 80-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆனால், ஜியா மட்டுமே அனைவருக்கும் தெரிகிறார். தமிழை கற்றதற்காக நாம் அனைவரும் கவனிக்கப்பட்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என ரியா கூறினார். மூத்தவர்கள் இருவரை போலவே, சுப்ரியா குமாரியும் தமிழில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். அவர்களது தாய் ரீனாவும் தமிழை பழகி, போஜ்புரி உச்சரிப்புடன் பேசுகிறார்.
ரியா, பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு பொறியியல் படிக்க திட்டமிட்டுள்ளார். ஜியா, மருத்துவத் துறையில் படிக்க விரும்புகிறார்.
“நான் இங்கு வந்த பிறகு ஒருபோதும் வெளி மாநிலத்தவராக யாரும் எங்களை நினைக்கவில்லை. ஆரம்ப நாட்களில் தமிழில் பேச என்னால் சிரமமாக இருந்தபோதும் கடை விற்பனையாளர்கள் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை புரிந்து கொண்டு உதவினார்கள். அவர்கள் உதவியால் தான் தமிழை இங்கே கற்றேன்,” என்று ரீனா கூறுகிறார்.
ரீனாவின் கணவர் தனஞ்ஜய், தினசரி 700 ரூபாய் சம்பளத்தில் வெல்டர் வேலை பார்த்தாலும், தமிழை பேச சிரமப்படுகிறார். வேலைக்கும் வீட்டுக்கும் இந்தி போதுமானதாக இருந்தது. என் மேற்பார்வையாளர்கள் இந்தி பேசத் தெரிந்தவர்கள். என் உடன் வேலை செய்யும் பலரும் வடஇந்தியாவிலிருந்து வந்தவர்கள். அதனால் தமிழைப் பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், தமிழைப் புரிந்து கொள்ள முடிகிறது,” என்று தனஞ்ஜய் கூறினார்.
ரீனா, தமிழ்நாடு அரசின் மதிய உணவு திட்டம் மற்றும் இலவச யூனிஃபார்ம் திட்டத்திற்கும், புத்தகங்கள், காலணிகள் போன்றவற்றிற்கும் நன்றி தெரிவித்தார்.