கவுகாத்தி: பிரம்மபுத்திரா ஆற்றில் அற்புதமான காட்சி ஒன்றை படமாக்கி உள்ளார் புகைப்பட கலைஞர் சச்சின் பரலி.ஆழமான ஆற்றை யானைக்கூட்டம் ஒன்று நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ காட்சியை அவர் படமாக்கி வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான யானைகள் சர்வ சாதாரணமாக மிகமிக ஆழமான பிரம்மபுத்திரா ஆற்றை அசால்டாக கடந்து சென்றிருந்தன.
விலங்கு இனங்களில் மிகப்பெரியது என்றால் அது யானை தான். யானை பார்க்க மட்டும் பிரம்மாண்டமானவை இல்லை.. அவை செய்யும் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மாண்டமானவை..யானைகள் உருவத்தில் மிகப் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவை.
அதேநேரம் மனிதனை போல் தன் மீது சுயபற்று உள்ள விலங்கு ஆகும். தன் உடலின்மீது அதீத அக்கறை கொண்ட யானை, தனக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும். ஏனெனில் உடலில் சின்ன காயம் ஏற்பட்டாலும் அதை அடிக்கடி தனது துதிக்கையால் தொட்டுப்பார்க்கும். யானையை பொறுத்தவரை மனிதர்கள் போன்ற பல்வேறு குணங்களை கொண்டிருந்தாலும், மனிதனை போல் கூட்டமாக வாழும் பழக்கம் உள்ளவை.
யானைகள் மனிதர்களை போலவே தனது குடும்ப உறுப்பினர்களிடம் சைகை மொழியில் பேசிக்கொள்ளும். தனது குழந்தைகளை கண்டிப்புடன் வளர்க்கும். யானை அசால்டாக மலை மீது ஏறக்கூடியவை.. யானைகளால் சர்வ சாதாரணமாக நீந்த முடியும். யானைகளால் நன்றாக ஓடவும் முடியும்.
யானை தன் குட்டிகள் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருக்கும். தப்பித்தவறி அவை கூட்டத்தைவிட்டு பிரிய நேர்ந்தால், அல்லது ஒற்றை யானையாக வளம் வர நேர்ந்தால், கண்ணில் சிக்குபவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்யும். அதேபோல் ஒருமுறை ரேஷன் அரிசி, பழங்களை கண்டுவிட்டால் அங்கு அடிக்கடி வந்து செல்லும்.
யானைகள் கூட்டம் கூட்டமாக வசித்தாலும் அவை பொதுவாக காடுகளை கடந்து செல்வதை பலரும் பார்த்து இருப்பார்கள். நீர்நிலைகளுக்கு அருகில்கூட அவை பெருங்கூட்டமாக வந்து நீர்அருந்தி கடந்து சென்றுவிடும். ஆனால் மிக அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முயலாது என நினைத்து கொண்டிருக்கிறோம்.
அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள், ஆழமான ஆற்றையும் அசாதாரணமாக எங்களால் கடக்க முடியும் என்பதை யானைகள் நிரூபித்துள்ளன. 80க்கும் மேற்பட்ட யானைகள் பெருங்கூட்டமாக அசாமின் பிரமாண்டமான பிரம்மபுத்திரா நதியை நீந்திக் கடக்கின்றன. அவற்றின் முதுகு பகுதிகள் மட்டுமே மேலே தெரியும் அளவில் ஆழமான இடத்தில் அவை நீந்தி செல்லும் காட்சியை பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
வழக்கமாக காட்டு மாடுகள்தான் நூற்றுக்கணக்கில் இப்படி மந்தையாக ஆற்றைக்கடக்கும், முதல்முறையாக யானைகள் இப்படி கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது.