தற்போது எல்லாம் ஒருத்தருக்கு ஒரு திருமணம் நடைபெறுவதே தலையை சுற்றி மூக்கைத் தொடும் கதையாக உள்ளது. சில பேர் காதலித்து திருமணம் செய்ய பெண்ணோ, பையனோ இல்லை என புலம்ப இன்னொரு பக்கம், வீட்டார் பார்த்து திருமணம் செய்து கொள்வதற்கும் சிறந்த வரன்கள் அமைவதில்லை. பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் நிபந்தனைகள் அதிகமாக இருக்க, அவை திருமணத்தை நோக்கி தொடர்வதற்கே பெரும்பாடாக உள்ளது.
இதனால், 90 ஸ் கிட்ஸ் பலரும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து புலம்பி கொண்டிருக்கும் அதே சூழலில், ஒருவர் 3 வது திருமணத்தை செய்து முடித்துள்ளார். அதுவும் முதல் இரண்டு மனைவிகள் சம்மத்துடன் இந்த திருமணம் அரங்கேறியது தான் பலரையும் தலை கிறங்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு என்ற மாவட்டத்தில் பெடப்பயலு என்ற கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் தான் பாண்டண்ணா. இவருக்கும் பர்வதம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால், என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருந்த சமயத்தில் தான் பர்வதம்மா அனுமதியுடன் அப்பல்லம்மா என்ற பெண்ணையும் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் பாண்டண்ணா. அப்படி ஒரு சூழலில், அப்பலம்மா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், பாண்டண்ணா, பர்வதம்மா, அப்பலம்மா என 3 பேருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் பின்னர் தான் மற்றொரு திருப்புமுனையும் அரங்கேறி உள்ளது. இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டுமென பாண்டண்ணா நினைத்துள்ளார். ஆனால், இதற்கு அவரது இரண்டாவது மனைவி மறுப்பு தெரிவிக்க, தொடர்ந்து அவரை பாண்டண்ணா வற்புறுத்திக் கொண்டே இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பாண்டண்ணா ஒரு முடிவாக இருந்ததால் பார்வதம்மா மற்றும் அப்பல்லம்மா ஆகியோர் இணைந்து தங்களின் கணவருக்கு 3 வது திருமணத்தையும் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அதே கிராமத்தை சேர்ந்த லாவ்யா என்ற பெண்ணுடன் பாண்டண்ணாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னின்று 2 மனைவிகளும் நடத்தி வைத்துள்ளனர்.
மேலும், பேனரில் கணவருடன் 3 வது மனைவி இருக்கும் புகைப்படங்களுடன் தங்களின் புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளனர் அப்பல்லம்மா மற்றும் பார்வதம்மா ஆகியோர். குழந்தை வேண்டும் என்பதற்காக கணவர் அடம்பிடிக்க, அதற்கான தீர்வு என்ற பெயரில் 3 வது திருமணத்தை நடப்பது தான் சரி என இறங்கிய 2 மனைவிகளை பலரும் வியப்புடன் தான் பார்த்து வருகின்றனர்.