பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தான் குடிமக்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் இதுகுறித்து பேசினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வசித்து வரும் பாகிஸ்தான் குடிமக்களை அடையாளம் காண்பதற்கும், அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில முதல்வர்களிடம் அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த உத்தரவு, மாநில தலைமைச் செயலர்களுடன் நடந்த உயர் மட்டக் கூட்டத்துக்கு பிறகு வழங்கப்பட்டது.
ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது. இதேசமயம், பாகிஸ்தானில் வசித்து வரும் இந்தியக் குடிமக்கள் உடனடியாக நாடு திரும்பவேண்டும் என அறிவுறுத்தியது.
இந்த விசா ரத்து நடவடிக்கைகள், இந்தியாவில் 26 சுற்றுலா பயணிகளை கொன்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்த நிலையில் எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை பாகிஸ்தான் ஹிந்துக்கள் உள்ளிட்ட நீண்டகால விசா பெற்றவர்களுக்கு பொருந்தாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவை முறையானவையாகவே தொடரும்.
இந்த முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் உறுதியாக எடுக்கப்பட்டவை.
இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டாலும், மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்ரல் 29 வரை செல்லும். தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் குடிமக்கள், தங்கள் விசா காலாவதியாகும் முன்பே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், பாகிஸ்தான் ஊக்குவிக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்து இந்தியா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.