பயங்கரவாத வலைப்பின்னல்: அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் அதிரடி ரத்து! AIU நடவடிக்கை

டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஃபரிதாபாத்தை மையமாக கொண்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் (Al-Falah University) பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இந்த உயர்கல்வி நிறுவனத்தின் உறுப்பினர் உரிமையை அகில இந்திய…

university

டெல்லியின் செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஃபரிதாபாத்தை மையமாக கொண்ட அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் (Al-Falah University) பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, இந்த உயர்கல்வி நிறுவனத்தின் உறுப்பினர் உரிமையை அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது கல்வி உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அல்-ஃபலா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்படவில்லை என காரணம் காட்டி, AIU இந்த முடிவை எடுத்துள்ளது. ஊடக அறிக்கைகள் மூலம், ஹரியானா ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகம் நல்ல நிலையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக, அல்-ஃபலா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட AIU உறுப்பினர் உரிமை உடனடியாக தகுதி இழந்ததாக கருதி அதன் உரிமம் நிறுத்தி வைக்கப்படுகிறது,” என்று AIU தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் தங்கள் வலைதளத்தில் இருந்து AIU-ன் பெயர் மற்றும் சின்னத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அவற்றை எந்தவொரு செயல்பாட்டிலும் பயன்படுத்த கூடாது என்றும் ஃபரிதாபாத் நிறுவனத்திற்கு சங்கம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் AIU-ன் இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, சிறிது நேரம் முன்பு வரை செயல்பட்டு கொண்டிருந்த பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர் உரிமை ரத்து செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அல்-ஃபலா பல்கலைக்கழகம் வேறு ஒரு சிக்கலிலும் மாட்டியுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் , போலி அங்கீகாரம் குறித்து பல்கலைக்கழகத்திற்கு காரணம் கேட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறவில்லை என்றும், அதற்கான எந்த நடவடிக்கைக்கும் விண்ணப்பிக்கவில்லை என்றும் NAAC தெரிவித்துள்ளது.

டெல்லி செங்கோட்டையில் 12 பேர் பலியான கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படும், பல்கலைக்கழகத்தின் இரண்டு ஆசிரியர்களான டாக்டர் உமர் அன் நபி மற்றும் டாக்டர் முஸம்மில் ஷகீல் ஆகியோர் இந்தச் சர்ச்சையின் மையமாக உள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, புலனாய்வு குழுக்கள் பல்கலைக்கழக வளாகம் வரை தங்கள் விசாரணையை விரிவுபடுத்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 52 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த கல்வி நிறுவனம், பயங்கரவாத வலையமைப்பின் மறைமுகத் தளமாக செயல்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.