சமீபத்தில் நடந்த ஆய்வில், ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில், பிரபல சுதந்திரப் போராட்ட வீரர் சிட்டு பாண்டேயின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் தான் எண்ணெய் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், இங்கு கச்சா எண்ணெய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,000 மீட்டர் ஆழத்தில் எண்ணெய் மிகப்பெரிய அளவில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கச்சா எண்ணெய் களஞ்சியம் பாலியா முதல் பிரயாக்ராஜ் வரை மொத்தம் 300 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ONGC இதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் இருப்பதாகக் கூறப்படும் நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தும் முயற்சி நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சிட்டு பாண்டே குடும்பத்திற்குச் சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை ONGC மூன்று ஆண்டுகளுக்கு லீஸ் பெற்றுள்ளது. இதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கட்டணமாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3,000 மீட்டர் ஆழத்திற்கு கிணறு தோண்ட வேண்டியிருக்கும் என்றும், இதற்காக தினமும் 25,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும் என்றும், ஏப்ரல் இறுதிக்குள் இந்த வேலைகள் முடிவடையும் எனவும் கூறப்படுகிறது.
இங்கு இருக்கும் கச்சா எண்ணெய் அளவு மிகப்பெரியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், இந்தியா உலகின் முதன்மை எண்ணெய் வளமுள்ள நாடாகவும், வல்லரசு நாடாகவும் மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.