வந்தனா மேத்தா என்பவர், குருகிராமில் தனது சிறு வயது மகளை பேணிக் காப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். மகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர், கடைகளில் கிடைக்கும் சாக்லேட்டுகளில் கெமிக்கல்கள் மற்றும் பிற ரசாயனங்கள் கலந்து இருப்பதை கவனித்தார். அதனால், அவற்றை கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே சாக்லேட் செய்ய முயன்றார்.
அவருடைய முயற்சி வெற்றியடைந்தது. ராகி, கம்பு போன்ற ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி தயாரித்த சாக்லேட்டுகளை மகளுக்கு கொடுத்த போது, மகளும் அதை ரசித்து சாப்பிட்டார். இதனால், இதையே தொழிலாக மாற்றலாம் என்ற எண்ணம் வந்தனாவுக்கு பிறந்தது. அதன் மூலம், அவர் “Chocolate Corner” என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
இந்த நிறுவனத்தின் மூலம், அவர் சாக்லேட், கேக்குகள் உள்ளிட்ட ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை தயாரித்து விற்பனை செய்தார். அவருடைய கொள்கை மிகவும் எளிமையானது.
ரசாயன கலவைகளை தவிர்க்க வேண்டும். சுவையை விட்டு கொடுக்காமல் ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும். ராகி, கம்பு ஆகிய இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஆகியவை தான். முதலில், இவருடைய பிராண்ட் உள்ளூரில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, நாடு முழுவதும் பிரபலமடைந்ததோடு, தற்போது ஏற்றுமதிக்காகவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரண இல்லத்தரசியாக இருந்த வந்தனா மேத்தா, தனது மகளுக்காக ஆரோக்கியமான ஒரு நொறுக்குத்தீனியை உருவாக்கிய நிலையில், அதையே ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றியிருப்பது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.