ரெடிட் சமூக வலைத்தள பயனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், தனது சக ஊழியருக்கு நடந்த கொடுமை குறித்து விளக்கியுள்ளார். அவரது சக ஊழியர் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும், கல்லூரியில் படிக்கும் போதே வறுமையில் இருந்த அவர், கடுமையான பொருளாதார அழுத்தத்தால் பெற்றோர்களையும் தன்னையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு வேலை கிடைத்தது பெரும் நிம்மதி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், வீட்டு வாடகை செலுத்த போராடினார், கிரெடிட் கார்டு கடனில் மூழ்கினார். பல மாதங்கள் கடுமையாக உழைத்தும், அவருக்கான போதிய வருமானம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அந்த நிறுவனம், “60 நாள் நோட்டீஸ் பீரியட் முடித்துவிட்டு வந்து வேலையில் சேர வேண்டும்” என்று அறிவுறுத்தியது. இதற்கிடையில், அவர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனம் “90 நாட்கள் கண்டிப்பாக நோட்டீஸ் பீரியட் வேலை செய்ய வேண்டும்; அப்படி செய்தால் மட்டுமே ரிலீவ் செய்வோம்” என்று பிடிவாதமாக இருந்தது.
அவர் மிகவும் திறமையான பணியாளர்; நிறுவனத்திற்காக நிறைய உழைத்தவர். ஆனாலும், மேலதிகாரிகள் மனிதாபிமானமின்றி அவரிடம் நடந்து கொண்டனர். இதனால், மன அழுத்தத்திற்கு ஆளான அவர், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
“இந்த பாவம் சும்மா விடாது” என்று ரெடிட் பயனர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து, நோட்டீஸ் பீரியட் குறித்த விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும், அனைத்து நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட நோட்டீஸ் காலத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.