நான்கு மாத குழந்தைக்கு HIVஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த குழந்தையை பெற்ற பெண்ணும் தத்தெடுப்பதாக கூறிய பெண்ணும் கைவிட்டதால், அனாதையாக இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், ஒரு இந்து பெண் தனது கணவர் போதைக்கு அடிமையானதால் கர்ப்பத்தை தொடர விரும்பவில்லை. இதனால், கர்ப்பத்தை கலைக்க முயன்றார். அப்போது, குழந்தை இல்லாத ஒரு முஸ்லீம் பெண், “நீங்கள் குழந்தையை பெற்று, என்னிடம் தத்து கொடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் யாருக்கும் தெரியாமல் உடன்பாடு செய்து கொண்டனர்.
இந்த நிலையில், அந்த இந்து பெண் பிரசவத்தின் போது முஸ்லீம் பெண்ணின் பெயர் மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுத்தார். பிறப்புச் சான்றிதழில், தாயின் பெயர் முஸ்லீம் பெண்ணின் பெயராக இருந்தது.
குழந்தை பிறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, திடீரென குழந்தைக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது தான் அந்த குழந்தைக்கு HIV இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தத்து எடுப்பதாக கூறிய முஸ்லீம் பெண், குழந்தையை தனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல மறுத்தார். உண்மையான தாயும், “எனக்கு அந்த குழந்தை வேண்டாம்” என்று கூறிவிட்டார்.
மேலும் இரண்டு பெண்களும் பெயர்களை மாற்றி செய்த ஒப்பந்தம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது. தற்போது, இரு பெண்களுமே அந்த குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று கூறியதால், குழந்தை அனாதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.