பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 18 வயது தம்பிக்கு ஏற்பட்ட கொடூர அனுபவத்தை சமூக வலைதளத்தில் விவரித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் போன இரண்டு போலீஸ் அதிகாரிகளின் பொறுப்பில்லாத செயலை விமர்சித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவலின்படி, தனது 18 வயது சகோதரர் பெங்களூர் விமான நிலையத்தில் நள்ளிரவில் வந்து இறங்கினார். அவர் வீட்டுக்கு செல்ல முயன்றபோது, ஓலா, உபர், ராபிடோ போன்ற செயலிகளின் மூலம் வாகனம் அழைக்க முயன்றார். ஆனால் எந்த ஒரு வாகனமும் கிடைக்காத நிலையில், இறுதியாக விமான நிலைய டாக்ஸி ஒன்றை ராபிடோ ஆப் மூலம் ரூ.800 கட்டணத்திற்கு ஒப்புக்கொண்டு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், வாகனத்தில் ஏறிய பிறகு, அந்த டிரைவர் 19 கிலோ மீட்டர் போகக்கூடிய வழிக்கு பதிலாக 24 கிலோமீட்டர் வழியை தேர்வு செய்துள்ளார். இது குறித்து தனது தம்பி கேட்டபோது, டிரைவர் திடீரென காரை நிறுத்தி, “ரூ.3000 பணம் தர வேண்டும்” என்று கூறியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அவரின் சகோதரர் பணம் கொடுக்க மறுத்ததால், டிரைவர் அவரை தாக்கி, “என்னுடைய நண்பர்களிடம் அழைத்துச் செல்கிறேன். அங்கு சென்றால் நிலைமை இன்னும் மோசமாகும்” என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவில், எந்த இடம் என்றே தெரியாத ஒரு இடத்தில் பயந்துபோயிருந்த அவரது தம்பி, அங்கு அருகே வந்த இரண்டு காவல்துறை அதிகாரர்களிடம் புகார் அளித்தார். ஆனால், அந்த போலீஸ்காரர்கள் “அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டு போய்விட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், காவல்துறையினர் பொறுப்புடன் நடந்துகொண்டு, அவரது தம்பியை பாதுகாத்திருக்கலாம். ஆனால், அவர்கள் உதவி செய்யாததால், அவரது தம்பி தாக்கப்பட்டதோடு ரூ.3000 பணமும் இழந்ததாகவும், தற்போது அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பெங்களூர் விமான நிலைய அதிகாரிகள் அந்த இளம் பெண்ணை தொடர்புகொண்டு முழு விவரங்களை கேட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட டாக்ஸி டிரைவரை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
