பெண்களின் மாதவிடாய் சுழற்சி என்பது ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சிக்கலான செயல்பாடு. இதில் ஏற்படும் மாற்றங்கள், பல பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சிலருக்கு இன்னும் இதுபற்றிய தெளிவு இல்லை.
பூப்பெய்திய முதல் இரண்டு ஆண்டுகள், குழந்தை பிறந்த சில மாதங்கள், மற்றும் மெனோபாஸ் காலகட்டத்தில் மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கலாம். இந்த சூழல்களை தாண்டி, பல மாதங்களுக்கு சுழற்சி சீராக இல்லாவிட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
மாதவிடாய் தடை, தாமதமான சுழற்சி, இரத்தப்போக்கில் மாற்றம், அதிக களைப்பு, உடல் வலி, குமட்டல் ஆகியவை ஒழுங்கற்ற மாதவிடாயின் பொதுவான அறிகுறிகள். உடல் பருமன், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், சில மருந்துகள், மன அழுத்தம், மரபியல், கருப்பை நீர்க்கட்டிகள் (PCOS), தைராய்டு பிரச்சனைகள், மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
விழிப்புணர்வுத் தேவை
ஆய்வுகள் சொல்வது என்னவென்றால், மாதவிடாய் குறித்த சமூக விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. இளம் பெண்களுக்கு இதுபற்றி போதுமான தெளிவை பெற்றோர்கள் அளிப்பதில்லை. இதனால், அச்சம் ஏற்பட்டு ஹார்மோன் மாற்றங்கள் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய் உருவாகலாம். பாலியல் கல்வி போலவே, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வும் அவசியம்.
தீர்வுகள் மற்றும் பாரம்பரிய உணவு முறைகள்
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். தைராய்டு, PCOS போன்ற பிரச்சனைகளுக்கு சரியான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உதவும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடற்பயிற்சி, யோகா, மற்றும் சரியான உணவு முறை மூலம் பலனடையலாம்.
பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்வது அவசியம். எள், கொள்ளு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் வாராந்திர உணவில் சேர்க்கப்பட வேண்டும்.
கொள்ளு: சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைகளை தடுக்கவும், குணப்படுத்தவும் கொள்ளு கஞ்சி, ரசம், சுண்டல் போன்றவை உதவும். இது உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
கல்யாண முருங்கை அடை: கருப்பைக்கு வலிமை அளித்து, கட்டிகள் வராமல் தடுக்க கல்யாண முருங்கை இலைகளை மாவில் சேர்த்து அடை போல சாப்பிடலாம்.
அத்திக்காய்: இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து அத்திக்காய் பொரியல் அல்லது பச்சடி போல சாப்பிடுவது மாதவிடாயை சீராக்க உதவும்.
வெந்தயம்: வெந்தய நீர், களி, கஞ்சி, பொடி ஆகியவை கருப்பையை வலுப்படுத்தும். எள், வெந்தயம், உளுந்து போன்ற பாரம்பரிய உணவுகள் ஹார்மோன் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும்.
இரத்த சோகை: இரத்த சோகை இருந்தால், முருங்கைக் கீரை சூப், கறிவேப்பிலை துவையல், உலர்பழங்கள், மாதுளை, ஆட்டு ஈரல் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஹீமோகுளோபின் அளவு சீரடைந்தால் மாதவிடாயும் இயல்பாகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான அடிப்படை காரணத்தைப் புரிந்துகொண்டு, சித்த மருத்துவருடன் கலந்தாலோசித்து, கழற்சி சூரணம், குமரி லேகியம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது, ஒருங்கிணைந்த சிகிச்சையும் மாதவிடாயைச் சீராக்க உதவும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

