உடலில் இது மட்டும் நடந்தா மரணமே வராதாம்… நோய் வரக்காரணம் என்னன்னு தெரியுமா?

நம் உடலானது உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது. எனவே, உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல…

நம் உடலானது உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது. எனவே, உண்ணும் உணவு நல்ல உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல நீராக இருக்க வேண்டும்;

சுவாசிக்கும் காற்று நல்ல காற்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகில் நாம் உடல் நலத்தோடு வாழமுடியும். ஆனால் நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையோடு நடந்துகொண்டாலும், சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ, தவறான உணவுகளை உட்கொண்டு விடுகிறோம். அழுக்கான நீரைக் குடித்து விடுகிறோம். அசுத்தமான காற்றைச் சுவாசித்து விடுகிறோம்.

அப்பொழுது, உண்ட உணவு, குடித்த நீர், சுவாசித்த காற்று இவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் அனைத்தும் நம் உடலினுள்ளே போய்ப் படிந்து விடுகின்றன. அவ்வாறு படிந்துவிட்ட நச்சுப் பொருள்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவற்றை வெளியேற்றுவதற்கு நாம் ஒன்றும் முயற்சி செய்வதும் இல்லை. எனினும், உடம்பானது, தானாகவே அந்த முயற்சியைச் செய்கிறது. உடல் செய்யும் அந்த முயற்சிக்கு பெயர் தான் நோய்.

நாம் தவறான உணவுகளை உண்ணாமலும் அழுக்கான நீரைக் குடிக்காமலும், அசுத்தமான காற்றைச் சுவாசிக்காமலும், மிக மிக விழிப்போடு நடந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்போதுகூட, நமக்கு நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படியென்றால், நாம் எவ்வளவு நல்ல உணவை உண்டாலும், நாம் உண்ணும் உணவு முழுவதையும் உடல் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.

எவ்வளவு நல்ல தண்ணீரைக் குடித்தாலும் குடிக்கும் தண்ணீர் முழுவதையும் உடல் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை. நாம் எவ்வளவுதான் நல்ல காற்றைச் சுவாசித்தாலும், நாம் சுவாசிக்கும் காற்று முழுவதையும் உடல் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை. உண்ணும் உணவிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது உடல்.

குடிக்கும் நீரிலே, தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது உடல். சுவாசிக்கும் காற்றிலே தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு மீதியைக் கழிவுபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது உடல். இந்தக் கழிவுபொருள்கள் தாம் நாம் வெளிவிடுகிற மூச்சுக் காற்றாகவும், வியர்வையாகவும், சிறுநீராகவும். மலமாகவும், உடலினின்று வெளித் தள்ளப்படுகின்றன.

எனவே, உடலினுள்ளே 2 வகையான இயக்கங்கள் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, உள்ளிழுக்கும் இயக்கம். மற்றொன்று, வெளித்தள்ளும் இயக்கம். இவ்வியக்கங்களை நடத்தும் சக்திக்கே பிராணசக்தி என்று பெயர். இந்த இயக்கங்கள் சீராக நடைபெற்றால், நோயே வராது. நோயே மட்டுமன்று, நமக்கு மரணமேகூட வராது இந்த இயக்கங்களில் சீர்கேடு ஏற்படும்போதுதான், நமக்கு நோய் தோன்றுகிறது. மரணமும் நேருகிறது!