மிருதுவான சத்தான சபுதானா கிச்சடி! எப்படி செய்வது?

By Sowmiya

Published:

சபுதானா கிச்சடி என்பது பொதுவாக விரத நாட்களில் சமைத்து உண்ணக்கூடிய ஒரு வகையான கிச்சடி ஆகும். வட இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் தங்களின் விரத நாட்களில் நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான வலிமை கிடைப்பதற்கு இந்த கிச்சடி உணவை உண்பார்கள். ஆனால் இதை எப்பொழுது வேண்டுமானாலும் காலை, மாலை வேளைகளில் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த சபுதானா கிச்சடி ஜவ்வரிசியை கொண்டு செய்யக்கூடிய உணவாகும்.

ஜவ்வரிசி என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து பெறப்படக்கூடியது. உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருள்.

அட ஜவ்வரிசியில் இத்தனை நன்மைகளா?ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஜவ்வரிசி!

உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ரத்த சோகை போன்றவற்றிலிருந்து இந்த ஜவ்வரிசி காத்திடும். கருத்தரிக்கும் தன்மையை அதிகம் அடைய செய்கிறது, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யும். இப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இந்த ஜவ்வரிசி விளங்குகிறது. இந்த ஜவ்வரிசியை கொண்டு சுவையான சத்தான சபுதானா கிச்சடி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

javvarisi khichdi 1

சபுதானா கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
  • ஜவ்வரிசி – ஒரு கப்
  • உருளைக்கிழங்கு – ஒன்று
  • பச்சை மிளகாய் – 3
  • எலுமிச்சம் பழம் – அரை
  • உப்பு – தேவையான அளவு
  • வறுத்த வேர்க்கடலை – 3 ஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்
  • சீரகம் – ஒரு ஸ்பூன்
  • கடுகு – அரை ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி தழை – சிறிதளவு
சபுதானா கிச்சடி செய்யும் முறை:

ஜவ்வரிசியை 5 மணி நேரம் முன்பு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும்.

இதனை ஊற வைக்க அதிக தண்ணீர் சேர்க்கக்கூடாது ஒரு கப் ஜவ்வரிசிக்கு முக்கால் கப் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஜவ்வரிசி தண்ணீரை உறிஞ்சி பஞ்சு போல் மென்மையாக மாறி இருக்கும்.

இப்பொழுது ஒரு கடாயில் நெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்பொழுது பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

பின் உருளைக்கிழங்கை சதுர வடிவில் நறுக்கி இதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கு வெந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து அதன் மேல் வறுத்த வேர்க்கடலையை சேர்க்கவும்.

ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கண்ணாடி போன்ற பதத்திற்கு மாறும். இந்த ஜவ்வரிசியை அதிக நேரம் சமைக்க தேவையில்லை. குறைந்த தீயில் சில நிமிடங்கள் சமைத்தால் போதுமானது.

ஜவ்வரிசி சேர்த்து கிளறியதும் கொத்தமல்லி இலை தூவவும். இந்த கிச்சடியின் மேல் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து இறக்கி விடலாம்.

அவ்வளவு தான் பெண்களுக்கு அளவில்லாத ஆரோக்கியம் தரக்கூடிய சபுதானா கிச்சடி தயார்!