குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். தானாக உணவு உண்ணும் பொழுது குழந்தைகள் சரியாக உண்ண மாட்டார்கள் அதுமட்டுமின்றி உணவுப் பொருட்களை சிதறி விடுவார்கள் என நினைத்து பெரியோர்கள் தாங்களே குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விடுவார்கள்.
ஆனால் குழந்தைகளுக்கு உணவினை ஊட்டி விடுவதை விட தானாக எடுத்து உண்ண ஆரம்பத்திலேயே பழக்குவது மிகவும் நல்லது.
சாப்பாடு தானாக எடுத்து சாப்பிட கற்றுக் கொடுக்கும் பொழுது உணவோடு சேர்த்து பல நல்ல பழக்கங்களையும் அவர்களுக்கு புகட்ட முடியும்.
குழந்தைகள் உணவினை தானாக எடுத்து சாப்பிட கற்றுக் கொள்ளும் பொழுது அவர்கள் பிறரை சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் சுதந்திரமாக எதையும் கற்றுக் கொள்ள தொடங்குவார்கள் மேலும் குழந்தைகளுக்கு தங்களின் வேலைகளை தாங்களே செய்கிறோம் என்ற தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
குழந்தைகள் உணவினை அவர்களாக சாப்பிடும் பொழுது உணவினை தொட்டு அதன் தன்மையை உணர்ந்து சாப்பிடுவார்கள். உணவின் வெப்பநிலை ஆகியன பற்றி அறிந்து கொள்வார்கள். தொடுதல், நுகர்தல், சுவைத்தல், போன்ற பல உணர்திறன்கள் வேலை செய்கின்றன. குழந்தைகளுக்கு மோட்டார் திறனும் அதிகரிக்கிறது.
குழந்தைகளுக்கு எப்படி உணவினை அவர்களாக சாப்பிட பழக்குவது என்று பார்க்கலாம்.
- குழந்தைகள் எப்பொழுதும் வித்தியாசமான பொருட்களை விரும்புவார்கள் எனவே அவர்களுக்கான தட்டு, கரண்டி, டம்ளர், கிண்ணம் போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்தமான பொம்மைகள் வடிவில் வடிவமைக்கப்பட்ட பொருட்களை உபயோகியுங்கள்.
- ஆரம்பத்தில் எளிதில் கைகளால் எடுத்து சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை பழக்கலாம். தோசை இட்லி போன்றவற்றை குழந்தைகளுக்கு சிறிய வடிவில் அல்லது பல விதமான வடிவங்களில் செய்து கொடுத்தால் ஆர்வத்துடன் அதனை உண்பார்கள்.
- குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்தில் குழந்தையையும் அமர வைத்து உணவு உண்பதற்கு பழக்கலாம்.
- குழந்தையின் முன் அமர்ந்து நீங்கள் உணவினை எப்படி எடுக்கிறீர்கள்? எப்படி அதனை உங்கள் வாய்க்குள் செலுத்துகிறீர்கள்? என்பதை பார்த்து அதன்படி உண்ண சொல்லி அறிவுறுத்தலாம்.
- குழந்தைகள் உணவு உண்ண பழகும் பொழுது உடை மீது அல்லது தரையிலோ சிந்தித்தால் அது குறித்து கவலை வேண்டாம் நாட்கள் செல்ல அவர்களே பழகி விடுவார்கள்.
- கரண்டி அல்லது முள் கரண்டி கொண்டு உணவினை சாப்பிட கற்றுக் கொடுக்கும் பொழுது ஆரம்பத்தில் அவர்கள் கைகளைப் பிடித்து சொல்லிக் கொடுக்கலாம் அதன் பின் அவர்களாகவே செய்ய முயற்சிக்க அனுமதிக்க வேண்டும்.
- அவர்களுக்கான உணவுகள் பல்வேறு சுவைகளில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு 10ஆவது மாதம் முதல் 15ஆவது மாதத்திற்குள் அவர்களாக உணவு உண்ண பழக்க தொடங்கலாம்.
குழந்தைகளை அவர்களாக உணவு உண்ண உற்சாகப்படுத்துங்கள் இது அவர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு வழிவகுக்கும்.