கல்யாணம் பண்ணாததற்கு இப்படி ஓர் விளக்கமா? திருமண உறவு குறித்து கோவை சரளா சொன்ன பதில்

By John A

Published:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பார்த்து அவர் போலவே சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்த லட்சோப லட்சம் பேர்களில் சிலருக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது என்று சொல்லலாம். அந்த சிலரில் ஒருவர்தான் கோவை சரளா.கோயம்புத்தூரில் பிறந்த சரளா தனது அக்கா, தந்தையின் உதவியுடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தனது 14 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய கோவை சரளாவின் முதல் படம் வெள்ளிரதம். இந்தப் படத்தில் விஜயக்குமார் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.

அதன்பின் கே.பாக்யராஜின் முந்தாணை முடிச்சு படத்தில் நடித்த போதுதான் இவரை தமிழ் சினிமா உலகம் அடையாளம் கண்டது. இவரது கொங்கு தமிழும், சினிமா முகமும் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளி வழங்கியது. நாயகிகளாக நடித்தவர்கள் அதிகபட்சமாக 50 படங்களுக்கு மேல் நிலைக்காத நிலையில் காமெடி ரோலில் நடித்து 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் கோவை சரளா.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்துப் பெயர் வாங்கிய கோவை சரளா உலகநாயகன் கமல்ஹாசனுடன் சதிலீலாவதி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் தமிழில் வடிவேலு, தெலுங்கில் பிரம்மானந்தாவுடன் அதிக படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

கணவன் ஹீரோவாக நடித்த குப்பைப் படம்.. பார்க்கப் பிடிக்காத மனைவி.. எந்த ஹீரோ தெரியுமா?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான செம்பி திரைப்படம் இவரின் நடிப்புத் திறனை பறைசாற்றியது. மேலும் முனி படத்தின் அனைத்து பாகங்களிலும் நடித்து காமெடியில் அட்டகாசம் செய்திருப்பார். இப்படி தென்னிந்திய சினிமா உலகின் மூத்த கலைஞராக விளங்கும் கோவை சரளாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் கோவை சரளாவும் 60 வயதைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் கூறும் போது, “இறக்கும் போது தனியாகத் தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று தோன்றுகிறது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை” என்று திருமணம் உறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் கோவை சரளா. கோவை சரளாவின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

கோவை சரளாவைப் போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகை சித்தாரா போன்ற பலரும் திருமணம் செய்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.