கவியரசர் கண்ணதாசன் தமிழ்சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நபர். அவரது பாடல்கள் எக்காலத்துக்கும் பொருந்துபவை. வாழ்க்கையின் தத்துவங்களையும், காதல் ரசத்தையும் இவரைத் தவிர வேறு யாராலும் அவ்வளவு எளிமையான வார்த்தைகளால் பாடல்களை எழுதியிருக்க முடியாது. எல்லாமே சூப்பர்ஹிட் தான். அவரது வாழ்க்கையிலும் பல குறும்பான சம்பவங்கள் நடந்துள்ளன.
கவியரசர் கண்ணதாசன் பற்றி ஒரு நகைச்சுவையான சம்பவத்தை அவரது மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் சின்ன வயசுல அப்பாவை மாதிரி மிமிக்ரி பண்ணிக்கிட்டே இருப்பேன். அப்பக்கிட்ட நிறைய இடத்துக்குப் போகும்போது அவரோட ஸ்டைல் எனக்கு வந்துடுச்சு. போன்ல யாராவது பேசுனா ‘நான் தான் கண்ணதாசன்’னு அப்பாவை மாதிரி பேச ஆரம்பிப்பேன். உடனே அவங்க ‘ஐயா நான் தான்யா பேசறேன்’னு சொல்வாங்க. உடனே நான் என்னோட வாய்ஸ்ல பேச ஆரம்பிச்சிடுவேன்.
பஞ்சு அருணாசலம் எனக்கு பெரியப்பா மகன். அண்ணன் முறை. அவங்க கல்யாணமாகி தி.நகர் வீட்டுக்குக் குடி வந்துட்டாங்க. அண்ணியை பயங்கரமா கலாட்டா பண்ணிக்கிட்டே இருப்பேன். போன் பண்ணி ‘நான் தான் கண்ணதாசன் பேசறேன்… பஞ்சு இல்ல…’ன்னு கேட்பேன். உடனே அண்ணி எடுத்து ‘அவங்க இப்ப தான் முத்துராமன் சார் கூட போயிருக்காங்க.
நான் வந்த உடனே பேசச் சொல்றேன்…’னு பயந்து பயந்து பேசுவாங்க. அப்படி சொல்லிட்டு திருப்பி சிரிக்க ஆரம்பிப்பேன். ‘என்ன அண்ணி..’ன்னு சொல்வேன்… ‘துரை குரங்கே எனக்குத் தெரியும்..’னு சொல்வாங்க. இப்படி வாரத்துக்கு 3 முறையாவது பண்ணுவேன். என்னைத் திட்டிக்கிட்டே இருப்பாங்க. ஒருமுறை அப்பா அவசரத்துக்கு போன் பண்ணினாங்க. ‘நான் கண்ணதாசன் பேசறேன்.
பஞ்ச எங்க..?’ன்னு கேட்டாங்க. அப்போ அண்ணி எடுத்து, ‘துரை குரங்கே நீ குரல் மாற்றிப் பேசுனா எனக்குத் தெரியாதா..?’ன்னு கேட்டாங்க. அப்பாவுக்கு ஷாக். ‘நான் கண்ணதாசன்..’னு அழுத்தி சொன்னாரு அப்பா. அப்புறம் ‘அங்க போயிருக்காங்க…’ன்னு ஏதோ சொல்லி சமாளிச்சிட்டாங்க.
அப்புறம் பஞ்சு அண்ணன் வீட்டுக்குப் போகும்போது ஒரே திட்டு. ‘உனக்கு ஏதாவது இருக்கா? அப்பாக்கிட்ட அவன் தான் குரல் மாற்றிப் பேசுறான்னு நினைச்சி நான் ஏதோதோ சொல்லிட்டேன்’னு அண்ணி சொன்னாங்க.
அப்புறம் வீட்டுக்கு வந்ததும் அப்பா பார்த்தார். ‘ஓஹோ நீங்க குரல் மாற்றிப் பேசுவீங்களோ..?’ன்னு கேட்டுட்டு அப்படியே போயிட்டார். வேறெதுவுமே கேட்கல. ஆனா இன்னிக்கும் அந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வருது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.