மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் சினிமா உலகில் அடி எடுத்து வைத்த போது முதன்முதலாக அவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. ஆனால் காலம் அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியது.
எம்எஸ்.வி.யை ஒரு நடிகராக்கி அழகு பார்த்த பெருமை இயக்குனர் சரணையேச் சாரும். காதல் மன்னன் என்ற படத்தில் தான் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதனை ஒரு அருமையான கதாபாத்திரத்திலே நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் சரண்.
ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கேரக்டரில் எம்எஸ்.விஸ்வநாதன் நடித்தால் தான் நல்லாருக்கும்னு நினைத்தார் இயக்குனர் சரண். எம்எஸ்.விஸ்வநாதன் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்குக் காரணம் சரண் தன்னைத் தேடி அத்தனை முறை வந்தார் என்பது அல்ல.
அந்தப் படத்திலே என்ன மாதிரியான கதாபாத்திரத்தை எம்எஸ்.விஸ்வநாதன் ஏற்க இருந்தார் என்று சரண் சொன்ன விதம் தான் எம்எஸ்வி.க்குப் பிடித்தது. அதுதான் அவர் அந்தப் படத்திலே நடிப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தது.
படத்திலே ‘கண்ணதாசன் கபே’ என்ற ஓட்டலில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டர். உங்க கிட்ட யார் வந்து பேசினாலும் அதுக்குப் பொருத்தமா ஒரு கண்ணதாசன் பாட்டை எடுத்து விடுவீங்க. இந்தக் கேரக்டரில் உங்களை விட்டா வேறு யாரும் பொருந்த முடியாது என்பது தான் எங்களது எண்ணம்.
அப்படி சரண் அந்தக் கேரக்டரைப் பற்றிச் சொன்ன விதம் தான் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் அந்தப் படத்தில் நடிக்கக் காரணமாக அமைந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.