மனோகரா படத்தில் ஹீரோவா முதலில் நடிக்க இருந்தது சிவாஜி இல்லையா? அப்படின்னா யாரு?

By Sankar Velu

Published:

1936ம் ஆண்டு சம்பந்த முதலியார் மனோகரா நாடகத்தை திரைப்படமாக்கி புருஷோத்தமனாக அவரே நடித்து வெளியிட்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா திரைப்படமாக சாதிக்கவில்லை என்றாலும் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாக விளங்கிய அத்தனை நாடக மேடையிலும் மனோகரா நாடகம் பிரபலமான நாடகமாகவும் இருந்தது.

1949ம் ஆண்டு ஜூபிடர் சோமு தன்னோட பட நிறுவனம் மூலம் புதிய படத்தைத் தயாரிக்க விரும்பினார். பல கதைகளைக் கேட்டுப் பார்த்தும் எதுவும் அவருக்கு நிறைவு தரவில்லை.

கடைசியாக பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்தைப் படமாக எடுக்க முடிவு எடுத்தார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டார்.

கதாநாயகனாக அப்போது பிரபலமான கே.ஆர்.ராமசாமியை ஒப்பந்தம் செய்ய அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது மனோகரா படத்தின் வசனத்தைக் கருணாநிதி எழுதுவதாக சொன்னார்.

K.R.Ramasamy
K.R.Ramasamy

உடனே படத்தில் நடிக்க விருப்பமில்லை என்றாராம் கே.ஆர்.ராமசாமி. ஆனால் எவ்வளவோ முயன்றும் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லி விட்டார். எப்படியாவது கடைசியாக ராமசாமி நடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார் சோமு.

அதே நேரம் சிவாஜியை மனோகரனின் நண்பன் ராஜபிரியன் வேடத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் சிவாஜிக்கோ மனோகரா வேடம் தான் பிடித்திருந்தது. அப்போது சோமு அண்ணாவிடம் சென்றார்.

‘மனோகரா’ படத்தில் ராமசாமியை நடிக்க வைக்க பரிந்துரை செய்யுங்கள் என்றார். ஆனால் அண்ணாவோ ‘பராசக்தி’ வரும் வரை பொறுத்திருங்கள். மனோகரா வேடத்திற்கு கணேசன் பொருத்தமாக இருப்பார் என்றார். ஆனால் சிவாஜியை கதாநாயகனாக போடு என்கிறாரே என்ற குழப்பத்தில் இருந்தார் சோமு.

பராசக்தி படம் வெளியானது. கருணாநிதியுடன் அசோக் தியேட்டரில் சோமு படம் பார்த்தார். கொஞ்ச நேரத்தில் என்னம்மா நடிக்கிறார் கணேசன். பேசாமல் கணேசனையே மனோகரா வேடத்தில் நடிக்க வைக்கலாமோ என்று நினைத்தார்.

Manohara
Manohara

அன்று இரவு அண்ணாவை சந்தித்தார். கணேசன் நடிப்பில் பின்னிவிட்டானே. இனியும் ஏன் தயங்குகிறீர்கள்? மனோகராவில் கணேசனையே நடிக்க வைங்க என்றார் அண்ணா. பராசக்தி பார்த்ததுமே சிவாஜி தான் மனோகரா என்று மனதிற்குள் உறுதி செய்து கொண்டேன். அதை சொல்லத்தான் வந்தேன் என்றார் சோமு.

மனோகரா படத்திலும் சிவாஜி வீராவேசமாக நடித்துத் தூள் கிளப்பியிருப்பார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சிவாஜியின் திரையுலகப் பயணத்தில் மனோகரா ஒரு மைல் கல்லாகவே இருந்தது. பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் சிவாஜியை மனதார வாழ்த்தினார்.