அஜித்துக்கு அண்ணன்.. போலீஸ், வில்லன் வேடத்தில் ஃபிட்டான ஆள்.. கேரக்டராகவே வாழும் சம்பத் ராஜ்..

By Bala Siva

Published:

பொதுவாக சினிமாவில் ஸ்டைலிஷான வில்லன் அல்லது மிடுக்கான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்றால், அதற்கு ஃபிட்டான உடலாகவும், கெத்தாக வசனம் பேசும் உடலமைப்பு என அனைத்துமே ஒருமித்து இருக்க வேண்டும். இது அனைத்து நடிகர்களுக்கும் சரியானதாக அமைந்து விடாது. அந்த வகையில், ஸ்டைலிஷ் வில்லன் மற்றும் போலீஸ் கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் மிக கச்சிதமாக நடித்து கொடுப்பவர் தான் சம்பத் ராஜ்.

இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவர் நடிப்பு பயிற்சி பெற்று அதன் பின்னர் முறையாக திரையுலகுக்கு வந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சில படங்களிலும், சுந்தர் சி படங்களிலும் அவர் தவறாமல் இடம் பெறுவார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானாலும் தமிழ் திரையுலகில் அவர் விஜயகாந்த் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் உருவான ’நிறைஞ்ச மனசு’ என்ற படத்தில் சிவனாண்டி என்ற கேரக்டரில் அறிமுகமானார். முதல் படத்தில் அவரது கேரக்டர் வலுவாக இருந்ததையடுத்து அடுத்த படத்தில் அவருக்கு அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அஜித் நடித்த ’திருப்பதி’ என்ற திரைப்படத்தில் அவர் டாக்டர் கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு விஜயகாந்த் நடித்த ’பேரரசு’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். 2003 ஆம் ஆண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சம்பத், அதன் பின்னர் பருத்திவீரன், சென்னை 600028, பீமா, தோட்டா, வெள்ளி திரை, சரோஜா, காதலில் விழுந்தேன், யாவரும் நலம், ஐந்தாம் படை உள்பட பல படங்களில் நடித்தார்.

sampath raj scaled 1

’அசல்’ திரைப்படத்தில் அஜித்தின் அண்ணனாக நடித்து கலக்கி இருந்த சம்பத் ராஜ், வில்லன் வேடங்களில் மட்டுமில்லாமல் போலீஸ் வேடம், சிபிஐ அதிகாரி வேடம் உள்ளிட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் எடுத்தவர். அந்த அளவுக்கு நல்ல உயரம்  கட்டுக்கோப்பான உடலை வைத்திருந்ததால் அவர் எந்த கேரக்டருக்கும் பொருத்தமாக இருந்தார்.

கடந்த ஆண்டு கூட அவர் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். நடிகர் சம்பத் ராஜ் திரைப்படங்கள் மட்டுமின்றி  தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தூர்தர்சனின் ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்த அவர் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான ’ஆனந்த்’ என்ற சீரியலிலும், ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.

தற்போது பிஸியான நடிகராக இருந்து வரும் சம்பத் ராஜ், இன்னும் நிறைய படங்களில் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.